Tuesday, 12 June 2007

03. நீராரும் கடலுடுத்த

இது நடந்தது எம்.ஜி.ஆர் தீவிர எதிரணி அரசியலுக்கு வருவதற்கு முன்னால். அப்பொழுது கருணாநிதி முதல்வராக இருந்தார். அவருக்கு ஒரு விருப்பம். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசையமைத்தால் எப்படி இருக்கும் என்றுதான். தேசியகீதத்திற்கு இசையமைத்துப் பாடுகையில் தமிழ்த்தாய்க்கு மட்டும் இசைமாலை கூடாதா என்ன?

உடனடியாக கருணாநிதியின் நினைவிற்கு வந்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். உண்மையிலேயே தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசையமைக்கப் பொருத்தமானவர்தான். கருணாநிதி எழுதிய பாடல்களுக்குத் திரைப்படத்தில் இசையமைத்திருக்கிறார் அவர். ஒரு முறை ஏதோ ஒரு பாடலை எழுதி அனுப்ப....வசன நடையாக இருக்கிறது என்று சொல்லி மெல்லிசை மன்னர் திருப்பி அனுப்பி விட்டாராம். அடுத்து இன்னொன்று எழுது "வசன நடையாக இருந்தாலும் இசையமைக்கவும்" என்று குறிப்பும் அனுப்பினாராம். எந்த பாடல் அது என்று நினைவில்லை.

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசையமைத்தால் யாரைப் பாட வைக்க வேண்டும் என்று மெல்லிசை மன்னர் பெரிதும் யோசித்திருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். அவருடைய சிறப்பான கூட்டணி ஏழிசை வேந்தர் டி.எம்.சௌந்தரராஜனும் இசையரசி பி.சுசீலாவும்தானே. அவர்களை வைத்துப் பாடலைப் பதிவு செய்து விட்டார்.

அந்தப் பாடலைத்தான் இன்றும் நாம் பள்ளிகளில் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இனியும் கேட்போம். ஆக தமிழகம் இருக்கும் வரைக்கும்....தமிழ் இருக்கும் வரைக்கும்....மெல்லிசை மன்னரும், ஏழிசை வேந்தரும், இசையரசியும், இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்த கலைஞரும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள்.

இந்தப் பாடலை, இசையரசியின் வலைப்பூவில் உங்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.



அன்புடன்,
கோ.இராகவன்

22 comments:

  1. //தமிழ் இருக்கும் வரைக்கும்....மெல்லிசை மன்னரும், ஏழிசை வேந்தரும், இசையரசியும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள்.//

    அதற்கு காரணமாய் இருந்த கலைஞரும் கூட :)

    ReplyDelete
  2. உண்மையான வரிகள்.
    தமிழைத் தமிழ் உச்சரிப்போடு உணர்ச்சியோடு இவர்களால்தான் பாடமுடியும் ..
    இதை அறியாதவர்கள் யார்.

    இதயம் இனிக்கும் பாடல்.
    எந்தப் படமென்றுதெரியவில்லையே
    கலங்கரைவிளக்கோ??

    ReplyDelete
  3. ஒரு சந்தேகம் ராகவா!
    இப்பாடல் "நீராறும் கடலுடுத்த" எனத் தொடங்குமா? "நீராடும் கடலுடுத்த" எனத் தொடங்குமா?
    இதை எழுதியவர் பெயரை மறந்து விட்டேன். குறிப்பிடவும்.
    அறியாத் தகவல்கள்.
    நன்றி

    ReplyDelete
  4. நிதம் பள்ளியில் பாடும் பாடலுக்குப் பின் இப்படி ஒரு கதையா? சொன்னதுக்கு நன்றி ஜிரா!

    ReplyDelete
  5. //இதை எழுதியவர் பெயரை மறந்து விட்டேன். குறிப்பிடவும்.
    //

    கவிமணி தேசிக விநாயகம் அவர்கள்!

    ReplyDelete
  6. ////இதை எழுதியவர் பெயரை மறந்து விட்டேன். குறிப்பிடவும்.
    //

    கவிமணி தேசிக விநாயகம் அவர்கள்!//

    இல்லை..மனோன்மணியம் சுந்தரனார் அவர்கள்.

    ReplyDelete
  7. //இல்லை..மனோன்மணியம் சுந்தரனார் அவர்கள்//

    ஆமாம். மனோன்மணியம் சுந்தரனார் அவர்கள்தான்.
    அவசரத்தில் தவறாக எழுதிவிட்டேன்.
    சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ஜோ அவர்களே!

    நண்பர்களே!
    தவறான தகவலைத் தந்தமைக்காக வருந்துகிறேன். அனைவரும் மன்னிக்கவும்.

    (எதுக்கு இவ்ளோ மன்னிப்பெல்லாம் என்று கேட்பவர்களுக்கு: தமிழ்த்தாய் வாழ்த்து பற்றிய விஷயம் அல்லவா. அதான்)
    http://www.composetamil.com/tamil/content.aspx?typeid=10&contentid=30

    ReplyDelete
  8. // ஜோ / Joe said...
    //தமிழ் இருக்கும் வரைக்கும்....மெல்லிசை மன்னரும், ஏழிசை வேந்தரும், இசையரசியும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள்.//

    அதற்கு காரணமாய் இருந்த கலைஞரும் கூட :) //

    கண்டிப்பாக. அதையும் குறிப்பிட்டிருக்க வேண்டும். அலுவலகம் வந்த பிறகுதான் கருணாநிதி அவர்களின் பங்கு விட்டுப்போனது தெரிந்தது. இதோ..இப்பொழுது வீட்டுக்கு வந்து விட்டேன். உடனே சேர்த்து விடுகிறேன்.

    ReplyDelete
  9. // வல்லிசிம்ஹன் said...
    உண்மையான வரிகள்.
    தமிழைத் தமிழ் உச்சரிப்போடு உணர்ச்சியோடு இவர்களால்தான் பாடமுடியும் ..
    இதை அறியாதவர்கள் யார்.//

    உண்மைதான் அம்மா. ஒரு உச்சரிப்புப் பிழையைக் கூட காண முடியவில்லையே. உணர்ச்சியிலும் பழுதில்லை.

    // இதயம் இனிக்கும் பாடல்.
    எந்தப் படமென்றுதெரியவில்லையே
    கலங்கரைவிளக்கோ?? //

    இந்தப் பாடல் திரைப்படத்தில் வரவில்லையம்மா. கலங்கரைவிளக்கில் வந்தது பாவேந்தரின் கவிதை. அதற்கும் மெல்லிசை மன்னர்தான். இசையரசிதான். ஆனால் வெண்கலக் குரலோன். ஆம். சீர்காழி கோவிந்தராஜன்.

    ReplyDelete
  10. // யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    ஒரு சந்தேகம் ராகவா!
    இப்பாடல் "நீராறும் கடலுடுத்த" எனத் தொடங்குமா? "நீராடும் கடலுடுத்த" எனத் தொடங்குமா?
    இதை எழுதியவர் பெயரை மறந்து விட்டேன். குறிப்பிடவும்.
    அறியாத் தகவல்கள்.
    நன்றி //

    ஐயா, நீராரும் கடலுடுத்த என்று தொடங்கும். இந்தக் கவிதை மனோன்மணீயம் என்ற நூலின் கடவுள் வாழ்த்து. இந்த நூலை எழுதியமையாலே நூலாசிரியர் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை என்று புகழப்பட்டார். அத்துணை அருமையான நூல் அது.

    ReplyDelete
  11. // இலவசக்கொத்தனார் said...
    நிதம் பள்ளியில் பாடும் பாடலுக்குப் பின் இப்படி ஒரு கதையா? சொன்னதுக்கு நன்றி ஜிரா! //

    பாத்தீங்களா கொத்ஸ். இந்தப் பாட்டோட ரெக்கார்டு..கேசட்...இப்ப சிடி இல்லாத பள்ளிக்கூடம் உண்டா? கல்லூரி உண்டா? ஆனா அதுக்குப் பின்னாடி இப்பிடி ஒன்னு. :)

    ReplyDelete
  12. // நாமக்கல் சிபி said...
    //இல்லை..மனோன்மணியம் சுந்தரனார் அவர்கள்//

    ஆமாம். மனோன்மணியம் சுந்தரனார் அவர்கள்தான்.
    அவசரத்தில் தவறாக எழுதிவிட்டேன்.
    சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ஜோ அவர்களே!

    நண்பர்களே!
    தவறான தகவலைத் தந்தமைக்காக வருந்துகிறேன். அனைவரும் மன்னிக்கவும்.

    (எதுக்கு இவ்ளோ மன்னிப்பெல்லாம் என்று கேட்பவர்களுக்கு: தமிழ்த்தாய் வாழ்த்து பற்றிய விஷயம் அல்லவா. அதான்)//

    இருக்கட்டும் சிபி. ஜோதான் சரியாகச் சொல்லி விட்டாரே. அன்னையின் மன்னிப்பு எப்பொழுதும் உண்டு. :)

    கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்களும் சிறந்த கவிஞர். மிக எளிமையாக இலக்கணம் மாறாமல் எழுதுவார்.

    தலைவாரிப் பூச்சூடி உன்னை
    பாடசாலைக்குப் போவென்று சொன்னாள் உன் அன்னை
    சிலை போல ஏனங்கு நின்றாய்
    அங்கு சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்
    விலை போட்டு வாங்கவா முடியும் கல்வி என்று குழந்தைக்கு மிக அருமையாகச் சொன்னவர் அவர்.

    ReplyDelete
  13. நாமக்கல் சிபி,
    நீங்கள் கவிமணியை சொன்னதற்கு காரணம் இருக்கிறது .கவிமணியும் ஒரு தமிழ்தாய் வாழ்த்து எழுதியிருக்கிறார் . இரண்டிலும் கலைஞர் அதிகார பூர்வமாக தேர்ந்தெடுத்தது சுந்தரனார் எழுதியதை -என்று படித்த ஞாபகம்.

    ReplyDelete
  14. //நீராறும் கடலுடுத்த" எனத் தொடங்குமா? "நீராடும் கடலுடுத்த" எனத் தொடங்குமா?//

    யோகன் அண்ணா...
    தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல், மனோன்மணீயம் என்னும் காவிய நூலுக்காக, பெ.சுந்தரம் பிள்ளை அவர்கள் எழுதியது.

    அந்த நூலின் பாயிரப் பாடலாகத் தமிழ்த் தெய்வ வணக்கம் என்று எழுதினார். அதன் முதற் பத்தி தான் இன்று நாம் பாடும் தமிழ்த் தாய் வாழ்த்து!

    "நீராரும்" என்பதே சரி.
    நீராரும்-சீராரும் என்று எதுகை வருவதும் பாருங்கள்!
    நீர்+ஆரும்; ஆர்த்தல் என்றால் ஒலித்தல்

    நீரீனால் ஒலி எழும்பும் கடலை ஆடையாக உடுத்த நில மடந்தை (பெண்) என்கிறார் கவிஞர்!

    ReplyDelete
  15. ஜிரா,
    சுந்தரனாரும் கவிமணிபோல எங்கள் நாஞ்சில் நாட்டவரா? அல்லது நெல்லைக்காரரா?

    ReplyDelete
  16. ஜிரா
    இதில் இன்னொன்றும் கவனிக்க வேண்டும். இப்பாடல் சேர்ந்திசை.
    பொதுவாக டி.எம்.எஸ் குரல் கன கணீர் என்று மற்ற குரல்களைக் காட்டிலும் தூக்கலாக இருக்கும். அவ்வளவு ஹை பிட்ச்.

    ஆனாப் பாருங்க, இதில் சுசீலாம்மாவின் குரலும் அதே கணீர்-க்கு இணையாக ஒலிக்கிறது!
    சேர்ந்து பாடும் போது குரல் ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல், ஒரே அலைவரிசையில் இருப்பது சிறப்பு!

    ReplyDelete
  17. // ஜோ / Joe said...
    நாமக்கல் சிபி,
    நீங்கள் கவிமணியை சொன்னதற்கு காரணம் இருக்கிறது .கவிமணியும் ஒரு தமிழ்தாய் வாழ்த்து எழுதியிருக்கிறார் . இரண்டிலும் கலைஞர் அதிகார பூர்வமாக தேர்ந்தெடுத்தது சுந்தரனார் எழுதியதை -என்று படித்த ஞாபகம். //

    ஜோ, இது எனக்கும் செய்திதான். பகிர்ந்தமைக்கு நன்றி.

    // ஜோ / Joe said...
    ஜிரா,
    சுந்தரனாரும் கவிமணிபோல எங்கள் நாஞ்சில் நாட்டவரா? அல்லது நெல்லைக்காரரா? //

    ஜோ, ஒருவர் உங்களூர்க்காரர். அவர்தான் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. http://en.wikipedia.org/wiki/Kavimani_Desigavinayagam_Pillai இங்கே சென்று பாருங்கள். நாஞ்சில் நாடு பற்றியும் எழுதியிருக்கிறார்.

    சுந்தரம்பிள்ளை அவர்கள் திருவிதாங்கூர். அதாவது இன்றைய கேரளம்.
    http://www.saivaneri.org/manonmaniam-sundaram-pillai-or-manonmaniam-sundaranaar.htm

    ReplyDelete
  18. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    "நீராரும்" என்பதே சரி.
    நீராரும்-சீராரும் என்று எதுகை வருவதும் பாருங்கள்!
    நீர்+ஆரும்; ஆர்த்தல் என்றால் ஒலித்தல்

    நீரீனால் ஒலி எழும்பும் கடலை ஆடையாக உடுத்த நில மடந்தை (பெண்) என்கிறார் கவிஞர்! //

    நல்ல விளக்கம். இந்தக் கேள்வியை என்னிடம் ஒருவர் கேட்டார். அவருக்குப் புரிய வைக்க நான் சில கேள்விகளைக் கேட்டேன். அவருக்கு உங்கள் விளக்கம் கண்டிப்பாகப் புரியும் என்று நம்புகிறேன். :)

    // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    ஜிரா
    இதில் இன்னொன்றும் கவனிக்க வேண்டும். இப்பாடல் சேர்ந்திசை.
    பொதுவாக டி.எம்.எஸ் குரல் கன கணீர் என்று மற்ற குரல்களைக் காட்டிலும் தூக்கலாக இருக்கும். அவ்வளவு ஹை பிட்ச்.

    ஆனாப் பாருங்க, இதில் சுசீலாம்மாவின் குரலும் அதே கணீர்-க்கு இணையாக ஒலிக்கிறது!
    சேர்ந்து பாடும் போது குரல் ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல், ஒரே அலைவரிசையில் இருப்பது சிறப்பு! //

    ஆமாம் ரவி. கவனித்தேன். தமிழ்த்தாய் வாழ்த்தை ஒருவரொருவர் தனித்தனியாகப் பாடக் கூடாது என்று எண்ணித்தானோ என்னவோ மெல்லிசை மன்னர் டி.எம்.எஸ் மற்றும் பி.சுசீலா அவர்களை ஒரே அளவில் நேரத்தில் சேர்குரலாக பாட வைத்திருக்கிறார்.

    ReplyDelete
  19. 'தலைவாரிப் பூச்சூடி உன்னை...' என்ற அழகான பாடலை எழதிய கவிஞர் எங்கள் புதுச்சேரியில் பிறந்த பாவேந்தர் பாரதிதாசனார். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதியதாகத் திரு இராகவன் குறிப்பிட்டது தவறாகும்.

    அன்புடன்
    பெஞ்சமின் லெபோ
    (பிரான்சு)

    ReplyDelete
  20. // நனிநன்றியன் பெஞ்சமின் லெபோ said...
    'தலைவாரிப் பூச்சூடி உன்னை...' என்ற அழகான பாடலை எழதிய கவிஞர் எங்கள் புதுச்சேரியில் பிறந்த பாவேந்தர் பாரதிதாசனார். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதியதாகத் திரு இராகவன் குறிப்பிட்டது தவறாகும்.

    அன்புடன்
    பெஞ்சமின் லெபோ
    (பிரான்சு) //

    வாங்க பெஞ்சமின் லெபோ. தகவலுக்கு நன்றி. தப்பாச் சொல்லீட்டேன் போல. மன்னிச்சுக்கோங்க. பாவேந்தரும் மன்னிச்சுங்கங்க. "தலைவாரிப் பூச்சூடி உன்னை" கவிதையை எழுதியவர் பாவேந்தர் பாரதிதாசனார். :)

    ReplyDelete
  21. could you help me with literal tamil meaning of this song tamil thai vazthu

    ReplyDelete
  22. could any body assist me with the literal tamil meaning of Tamil thai vazthu. in PDF format

    ReplyDelete