Saturday, 24 November 2007

25. கதாநாயகி வரிசை 2 - விஜயகுமாரி

பழைய நடிகை விஜயகுமாரியை யாரும் மறந்திருக்க முடியாது. பூம்புகார் திரைப்படத்தில் கண்ணகியாக நடித்ததை இன்றைக்கும் கே.டிவி நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறதே. அவருக்காக இசையரசி நிறைய பாடல்களைப் பாடியிருக்கிறார் என்றாலும் இந்த ஒரு பாடல் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கது.

கருநிறமென்பது அழகன்று என்று ஒரு மூடநம்பிக்கை இன்றும் உலகெங்கும் இருப்பதை நாம் அறிவோம். அது ஒரு பெண்ணானால்? அந்த நிறத்திற்காகவே அவள் பழிக்கப்பட்டாள்? இழிக்கப்பட்டாள்? அந்த வேதனனயை என்ன சொல்வாள்?

கருப்பாக இருக்கும் ஆண்டவன் வேண்டும். பெண் வேண்டாமா? அதுதான் அவள் கேட்கும் கேள்வி? அதற்கு விடை இன்றும் நம்மிடையே இல்லை.

நானும் ஒரு பெண் என்ற திரைப்படத்திற்காக சுதர்சனம் இசையில் கவியரசர் கண்ணதாசனின் பாடல் நமக்காக இசையரசி பி.சுசீலா அவர்கள் குரலில் கிடைக்கிறது. கேளுங்கள்.

இந்தப் பாடலையும் தந்து அதை விருப்பமாகவும் வெளியிட்ட நண்பர் கூமுட்டை அவர்களுக்கு நன்றி பல.



அன்புடன்,
கோ.இராகவன்

Monday, 12 November 2007

பிறந்த நாள் இன்று.. நிறைந்து வாழ்க இசையரசி நீடுழி வாழ்க‌



இன்று இசையரசியின் பிறந்த நாள் ..

இசையின் பிறந்த நாள் ..

இசையரசி எல்லா வளத்துடனும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.



Let's wish our Melody Queen a Very HAPPY BIRTHDAY
பிறந்த நாள் பரிசாக இரண்டு சிறப்பு பாடல்கள்
2 special songs

1. பாமகரிசா (Pamagaresa )

ஒந்தே ரூபா இரடு குணா (ondhe rupa iradu guna)

சலீல் செளத்ரி (salil chowdry)

ஆர்.என். ஜெயகோபால் (R.N.Jayagopal)



பாலுவும் சுசீலாவும் பாடும் அழகை என்னவென்று சொல்வது

2. மனசு மனசின்டே காதில் (manasu manasinte kaadhil)
சோட்டானிக்கர அம்மா ( chottani kara amma)
ஆர்.சேகர் (R.Shekar)

ராத்திரி என்றால் இவ்வளவு இதமாகத்தான் இருக்க வேண்டும்
மதுரக்குரலோன் யேசுதாஸும்,சுசீலாவும் பாடும் அழகை சொல்ல வார்த்தைகளே போதாது.

Saturday, 10 November 2007

மாப்பிளைக்கு மாமன் மனசு; மாமனுக்கோ காமன் மனசு

"நெற்றிக்கண்" திரைப்படம் 1981 ஆம் ஆண்டு கே.பாலசந்தரின் கவிதாலயா தயாரிப்பு நிறுவனம் சார்பில் அன்றைய மசாலா இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்திருந்தது. முன்னர் கலாகேந்திரா என்ற நிறுவனம் மூலம் நண்பர்களுடன் கூட்டாகத் தயாரிப்பில் ஈடுபட்ட பாலசந்தர் சொந்தமாக கவிதாலயா நிறுவனத்தைப் பின்னர் ஆரம்பித்திருந்தார்.

என் நினைவுக்கு எட்டியவரை கவிதாலயாவின் முதல் தயாரிப்பு "நெற்றிக்கண்" தான். இந்தப் படத்தில் மன்மதராஜாவாக தந்தை ரஜினி, சிறீ ராமன் குணாம்சத்தில் மகன் ரஜனி என்று இரட்டை வேடமிட்டிருப்பார்கள். கூடவே சரிதா, மேனகா போன்றோர் நடித்திருப்பார்கள்.

இப்படத்தில் "ராமனின் மோகனம்", "தீராத விளையாட்டுப் பிள்ளை", போன்ற அருமையான பாடல்களுடன் முத்தாய்ப்பாக "மாப்பிளைக்கு மாமன் மனசு, மாமனுக்கோ காமன் மனசு" என்ற பாடலும் இருக்கும். பி.சுசீலா அம்மாவுடன் மலேசியா வாசுதேவன் இணைந்து பாடியிருக்கின்றார்.
இப்பாடலின் சிறப்பு என்னவென்றால் பொதுவாக அடக்கமாக வந்த பாடல்கள் பலவற்றுக்குச் சொந்தக்காரியான பி.சுசீலா சற்றே வேகமெடுத்துப்பாடியிருப்பார். கண்ணதாசன் வரிகளில் மாமனை எள்ளி நகையாடும் பாடல் வரிகளை அனாயசமாகப் பாடியிருப்பார்.

இன்னும் ஒன்று முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது. அது இப்பாடலுக்கு இளையராஜாவால் வழங்கப்பட்ட இசை. இதே படத்தில் "தீராத விளையாட்டுப் பிள்ளை" பாடலை மேற்கத்தேயப் பாணியில் வித்யாசமாகக் கொடுத்தது போல, "மாப்பிளைக்கு மாமன் மனசு" பாடலில் கர்நாடக இசையையும் மேற்கத்தேய இசையையும் கலந்து குழைத்துக் கொடுத்திருக்கின்றார் இளையராஜா. நுட்பமாக ஆழ்ந்து அனுபவிக்கும் போது இப்பாடலில் கொடுத்திருக்கும் ஜிகல் பந்தியை ரொம்பவே ரசிக்கலாம்.
இதோ பாடலைக் கேட்டு ரசியுங்கள்.

Wednesday, 7 November 2007

உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி



உன்னை கண்டு நான் ஆட
என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி



அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எம் அன்புத் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Saturday, 3 November 2007

21. கதாநாயகி வரிசை 1 - குஷ்பூ


இசையரசி திரையுலகம் நுழைந்தது முதல் பாடிய பாடல்கள் ஏராளம் என்றால்...அந்தப் பாடல்களுக்கு நடித்த நடிகைகளும் ஏராளம். அப்படி ஒவ்வொரு நடிகைக்கும் ஒவ்வொரு பாடலை எடுத்துக்காட்டும் முயற்சிதான் இந்தக் கதாநாயகி வரிசை.

முதல் கதாநாயகியாக நாம் பார்க்கப் போவது குஷ்பு. என்னடா...எத்தனையோ மணியான பாடல்களைப் பல கதாநாயகிகளுக்கும் பாடியிருக்கும் போது....குஷ்புவிலா தொடங்குவது என்று கேட்கலாம். குஷ்பு நடிக்க வந்த பொழுது பி.சுசீலா திரையுலகில் பாடிக்கொண்டிருந்தாலும் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படியிருந்தும் குஷ்புவிற்கு ஒரு அருமையான பாடலை இசையரசி பாடியிருக்கிறார்.

பொங்கல பொங்கல வைக்க
மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
நஞ்சையும் புஞ்சையும்
இந்தப் பூமியும் சாமியும்
என்றும் நம்கட்சி நம்கட்சி நம்கட்சி

ஆமாம். வருஷம் 16. மாபெரும் வெற்றி பெற்ற படம். பாசில், குஷ்பூ, கார்த்திக் ஆகியோருக்கு நல்லதொரு முன்னேற்றத்தைக் கொடுத்த படம்.

இளையராஜாவின் இசையில் வந்த மிகவும் அருமையானதொரு பாடல். காதல் துளிர்த்த பொழுதில் பாடும் பாடல். பூப்பூக்கும் மாசம் தைமாசம் என்று கேட்கும் போதே ஒரு மகிழ்ச்சி பரவுமே. இதோ இந்தச் சுட்டிக்குச் செல்லுங்கள். பாடலைப் பார்க்கவும் கேட்கவும் முடியும். கேட்டு ரசியுங்கள். அஞ்சலிதேவிக்கும் சாவித்திரிக்கும் பத்மினிக்கும் கே.ஆர்.விஜயாவிற்கும் பொருந்திய குரல் குஷ்புவிற்கும் அழகாகப் பொருந்துவதைப் பாருங்கள்.

இசையரசியின் தமிழ் உச்சரிப்பு குறித்துச் சொல்லிச் சொல்லி முடியவில்லை. பூமியும் என்று ஒரு சொல் பாட்டில் வருகிறது. bhoomi என்று அதைப் பொதுவாக உச்சரிப்போம். ஆனால் இந்தப் பூமியில் என்று வருகையில் நடுவில் ப் என்ற ஒற்று இருக்கிறது. முறையாகத் தமிழைச் உச்சரித்தால் இந்தப் poomiyum என்று வரும். அதை இசையரசியின் குரலிலும் இந்தப் பாட்டில் கேட்கலாம்.

குஷ்புவிற்கு வேறு எந்தப் பாடலும் பாடியிருக்கிறாரா என்று தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள். இது ஒன்றுதான் என்று வைத்துக் கொண்டாலும்.....முத்தான பாடல்.

நன்றி
1. குஷ்பூ படம் - www.bollywoodsagaram.com
2. பூப்பூக்கும் மாசம் பாடல் - விஜயகுமாரின் யூடியூப் பக்கங்கள்

அன்புடன்,
கோ.இராகவன்