Monday, 25 June 2007

06. தமிழ் மலையாளம் வங்காளம்

தமிழ்ல இருக்கு. மலையாளத்துல இருக்கு. வங்காளத்துலயும் இருக்கு. ஆமா. இன்னனக்குப் பாக்கப் போற...அட கேக்கப் போற பாட்டுதான். தமிழ் மலையாளம் புரியுது. மெல்லிசை மன்னரும் இசைஞானியும் இங்கயும் அங்கயும் கொஞ்சம் மாத்தி மாத்திப் போட்டிருக்காங்க. அதுனால இருக்கலாம். ஆனா வங்காளம்?

சலீல் சௌத்ரி பத்திக் கேள்விப்பட்டிருப்பீங்க. அவரு ஒரு வங்காள இசையமைப்பாளர். இந்தி மலையாளம்னு நெறையப் படத்துக்கு இசையமைச்சிருக்காரு. மலையாளத்துல ரொம்பப் பிரபலமான கரையினக்கர போனோரே பாட்டு மானச மைனே வரு பாட்டுக்கெல்லாம் இவர்தான் இசை. நல்ல இசையமைப்பாளர்.

செம்மீன் படம் இவரைக் கேரளத்தில் பிரபலப்படுத்தியது. நிறையப் படங்களுக்கு இசையமைச்சிருக்காரு. வாணி ஜெயராமை மலையாளத்தில் அறிமுகப் படுத்தியதே இவர்தான். இவர் தமிழ்ல ரெண்டு மூனு படத்துக்கு இசையமைச்சிருக்காரு. குறிப்பிட்டுச் சொல்லப் பட வேண்டிய படம் அழியாத கோலங்கள்.

அந்தப் படத்துல உள்ள காலத்தால் அழியாத காதற்பாட்டுதான் இந்தப் பதிவுல பாக்கப் போறோம். ஆமா. ஜெயச்சந்திரன் கூடச் சேந்து இசையரசி பாடிய "பூவண்ணம் போல மின்னும்" பாட்டுதான் அது. அழகிய இனிய காதற் பாட்டு. கேட்டுப் பாருங்க.



இதே மெட்டை மலையாளத்துலயும் வங்காளத்துலயும் சலீல் சௌத்ரி பயன்படுத்தீருக்காரு. மலையாளத்துல ஏதோ ஒரு ஸ்வப்னம் அப்படீன்னு ஒரு படம் 1977ல வந்தது. அந்தப் படத்துல இதே மெட்டு யேசுதாசைப் பாட வெச்சு எடுத்திருக்காரு. அத இங்க கேளுங்க. மலையாளத்துலதான் இந்த மெட்டை முதல்ல போட்டிருக்கனும். ஏன்னா அழியாத கோலங்கள் 1978ல வந்தது.

அத்தோட விட்டாரா...இந்த மெட்டு மேற்கு வங்காளம் வரைக்கும் போயிருக்கு. அந்தர்காட் அப்படீங்குற படத்துல பயன்படுத்தீருக்காரு. 1980ல வந்த அந்தப் படத்துல கிஷோர்குமாரும் லதா மங்கேஷ்கரும் பாடியத இங்க கேளுங்க.

இப்படி மூன்று மொழியில வந்த பாட்ட சோகமான மெட்டுல இசையரசி குரல்ல கேக்கனுமா? இதோ இங்கே.

மூன்று மொழிகள்ளயும் பாட்டைக் கேட்டீங்க. இப்ப கருத்துகளைக் கொட்டுங்க.

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, 19 June 2007

05.ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒன்னு நட்டு வெச்சேன்

P.சுசீலாவின் பாடல்களில் அவ்வளவாக நாட்டுபுற மெட்டுகள் அமைந்ததில்லை என்று வெகு நாட்களாக எனக்கு ஒரு எண்ணம் இருந்து வந்தது. சுசீலா என்றாலே மேல் தட்டு மக்களின் பாடகி என்றுதான் நினைத்து வந்தேன். அவரின் குரலில் உள்ள வளமையும் செரிவும் கேட்டாலே ஏதோ ஒரு பெரிய நகரில் ஒரு ஏ.சி அறையில் நாகரிக பெண்மனி பாடும் காட்சி தான் மனத்திறையில் தோன்றும்.ஆனால் அது எவ்வளவு தவறு என்று எனக்கு உணர்த்திய பாடல் இது. கிராமத்து ராஜா இளையராஜாவின் அருமையான நாட்டுப்புற மெட்டில் அமைந்த அழகான தமிழ் பாடல் இது. பாடலின் தாளமும் இசை அரசியின் பாவமும்,இனிமையான குரலும் உங்களை வேறு ஏதோ உலகிற்கு எடுத்து சென்றுவிடும். உங்களிடம் நல்ல ஹெட்போன் இருந்தால் அதை அணிந்து கொண்டு அமைதியான ஒரு சூழலில் கேட்டு பாருங்கள். நான் சொல்வது உங்களுக்கு புரியும்!! :-)

ஆசையிலே பாத்தி கட்டி : படம் - எங்க ஊரு காவக்காரன் : இளையராஜா



Get this widget | Share | Track details

Wednesday, 13 June 2007

04.ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

மாலை நேரம்,குயில்கள் கூவும் அழகான் ஒலி மெல்லிய குளிர் காற்றோடு கலந்து வர,தேவதை போன்ற பெண் ஒருத்தி தன் காதலனை பற்றி பாடுகிறாள். மிக இனிமையான மெல்லிசை,கவியரசர் கண்ணதாசனின் காலத்தை வெல்லும் வரிகள்,கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் அழகான முகமும்,அளவான நடிப்பும்.

இதனுடன் இசையரசியின் தெய்வீகக்குரல்!!!ஆஹா!!! எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று தான் சொல்லத்தோன்றுகிறது.

இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் என் மனதில் தோன்றும் அமைதியை வார்த்தைகளால் கூற முடியாது. அதே அமைதி உங்கள் மனங்களிலும் நிறம்பட்டும் என்ற வாழ்த்துக்களுடன் இந்த பதிவை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன் . பாடலை ஒரு முறை கண்டு களித்துவிட்டு,மற்றொருமுறை பாடலை கேட்டுக்கொண்டே வரிகளை படிக்க பாருங்கள். கவி புனைவது மட்டுமில்லாமல் இசைக்கு கச்சிதமாக பொருந்தக்கூடிய பாடலகள் புனைவது திரை இசையில் மிக முக்கியம்.அந்த கலையில் கவியரசர் எந்த அளவுக்கு தேர்ந்திருந்தார் என்பதற்கு இந்த பாடல் இன்னொரு சான்று.
இந்த பாட்டில்

"அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்"
"இரு விழியாலே மாலையிட்டான்"
"யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே"

போன்ற வரிகள் நான் மிகவும் ரசித்தவை.
இனிய இசையில் மயங்கி எழுக!! :-)



படம் - பாலும் பழமும்
இசை - விஸ்வநாதன்- ராம்முர்த்தி
பாடியவர் - பி. சுசீலா

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

நிலவும் மாலை பொழதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
நிலவும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்
இரு விழியாலே மாலையிட்டான்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்

நன்றி: http://www.tamilnation.org/literature/kannadasan/aalayamani.htm

Tuesday, 12 June 2007

03. நீராரும் கடலுடுத்த

இது நடந்தது எம்.ஜி.ஆர் தீவிர எதிரணி அரசியலுக்கு வருவதற்கு முன்னால். அப்பொழுது கருணாநிதி முதல்வராக இருந்தார். அவருக்கு ஒரு விருப்பம். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசையமைத்தால் எப்படி இருக்கும் என்றுதான். தேசியகீதத்திற்கு இசையமைத்துப் பாடுகையில் தமிழ்த்தாய்க்கு மட்டும் இசைமாலை கூடாதா என்ன?

உடனடியாக கருணாநிதியின் நினைவிற்கு வந்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். உண்மையிலேயே தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசையமைக்கப் பொருத்தமானவர்தான். கருணாநிதி எழுதிய பாடல்களுக்குத் திரைப்படத்தில் இசையமைத்திருக்கிறார் அவர். ஒரு முறை ஏதோ ஒரு பாடலை எழுதி அனுப்ப....வசன நடையாக இருக்கிறது என்று சொல்லி மெல்லிசை மன்னர் திருப்பி அனுப்பி விட்டாராம். அடுத்து இன்னொன்று எழுது "வசன நடையாக இருந்தாலும் இசையமைக்கவும்" என்று குறிப்பும் அனுப்பினாராம். எந்த பாடல் அது என்று நினைவில்லை.

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசையமைத்தால் யாரைப் பாட வைக்க வேண்டும் என்று மெல்லிசை மன்னர் பெரிதும் யோசித்திருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். அவருடைய சிறப்பான கூட்டணி ஏழிசை வேந்தர் டி.எம்.சௌந்தரராஜனும் இசையரசி பி.சுசீலாவும்தானே. அவர்களை வைத்துப் பாடலைப் பதிவு செய்து விட்டார்.

அந்தப் பாடலைத்தான் இன்றும் நாம் பள்ளிகளில் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இனியும் கேட்போம். ஆக தமிழகம் இருக்கும் வரைக்கும்....தமிழ் இருக்கும் வரைக்கும்....மெல்லிசை மன்னரும், ஏழிசை வேந்தரும், இசையரசியும், இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்த கலைஞரும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள்.

இந்தப் பாடலை, இசையரசியின் வலைப்பூவில் உங்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.



அன்புடன்,
கோ.இராகவன்

Friday, 8 June 2007

02. இசையரசி எந்நாளும் நீயே




இந்தப் பாடல் சற்று அபூர்வமானது என்றுதான் சொல்ல வேண்டும். இளையராஜாவின் இசையில் தாய்மூகாம்பிகை என்ற படத்தில் இடம் பெற்றது. இது ஒரு போட்டிப் பாட்டு. அம்மனே வந்து பாடுவதாக அமைந்த பாடல். அப்பொழுது பாலில் மருந்து கலந்து கொடுத்து விடுகிறார்கள். அம்மன் ஊமை மாதிரி நடிக்க...ஊமையான அம்மன் பக்தைக்குக் குரல் வந்து விடுகிறது. இப்படிப் போகிறது பாடல்.

அம்மனாக கே.ஆர்.விஜயா. அவருக்குப் பாடியது இசையரசி. அம்மன் அருளால் குரல் எடுத்துப் பாடுவது சரிதா. அவருக்குக் குரல் இசைக்குயில் எஸ்.ஜானகி. போட்டிக்கு வந்திருக்கும் மனோரமாவிற்கு எஸ்.ராஜேஸ்வரி. கேட்டுப் பாருங்கள். சிறப்பான பாட்டு.

இசையரசி எந்நாளும் நீயே
உனக்கொடு இணையாரம்மா!




அன்புடன்,
கோ.இராகவன்

01. முதற்பாட்டு முருகன் பாட்டு

இசையரசி எத்தனையோ பாடல்கள் பாடியிருக்கின்றார்கள். கந்தன் மீதும் கண்ணன் மீதும் அம்மன் மீதும் ஈசன் மீதும்..எத்தனையெத்தனை பாடல்கள். முதற்பாடலாக எனக்குப் பிடித்த முருகன் பாடலை நான் கொடுக்க விரும்புகிறேன்.

கந்தன் கருணை. படத்தின் பெயர் மட்டுமல்ல..படத்தின் இசையமைப்பாளருக்குக் கிடைத்ததும். ஆமாம். இந்தப் படத்திற்காக அவர் தேசிய விருது பெற்றார். அவர்தான் கே.வி.மகாதேவன்.

சொல்லச் சொல்ல இனிக்குதடா என்ற இந்த அருமையான பாடலை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.



அன்புடன்,
கோ.இராகவன்

இசையரசி




இசையரசி என்றால் அது என்னைப் பொருத்த வரையில் பி.சுசீலா அவர்கள்தான். அவருடைய குரலைக் கேட்டுதான் இசையின் இன்பத்தைப் பெரிதும் உணர்ந்திருக்கிறேன். அந்த அன்பிற்குச் செலுத்தும் சிறிய பரிசுதான் இந்த வலைப்பூ. அவரது பாடல்களை மக்களுக்கு வலைப்பூ வழியாக எடுத்துச் சொல்லும் ஒரு முயற்சி. இதற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறேன்.

அன்புடன்,
கோ.இராகவன்