பாடல்கள் பல விதம் உண்டு.அதில் ஒரு வகை என்னவென்றால், பாடல் ஒலிக்க ஆரம்பித்த உடன் உலகத்தில் உள்ள அனைத்து ஒலிகளும் அடங்கி போனாற்போல் இருக்கும். நாம் எந்த மன நிலையில் இருந்தாலும் பாடலின் இசையும் பாடகரின் குரலும் நம்மை சூழ்ந்துக்கொண்டு நம்மை தனி உலகிற்கு அழைத்து சென்றுவிடும். பாடலை கேட்டு முடிக்கும் போது நமது மனது ஒரு விதமான அமைதியான சூழலுக்கு வந்து விடும். மின்னலே படத்தில் வரும் "வசீகரா" பாடல் இந்த விதமான பாடலுக்கு ஒரு நல்ல உதாரணம்.
ஆனால் எனக்கு இது போன்று ஒரு உணர்வை முதன் முதலில் தந்து ,நான் இசையை ரசிக்க ஆரம்பித்து அதற்கு அடிமையாக வைத்த ஒரு பாடலை தான் இன்றைக்கு பார்க்க போகிறோம்.
போன பதிவு போட்ட போது தோன்றியது, அதை எழுதுவதற்கு இவ்வளவு நாள் ஆகிவிட்டது. கண்டு பிடித்து விட்டீர்களா?? ஆமாம், நான் சொல்வது "கேளடி கண்மனி" படத்தில் வரும் "கற்பூர பொம்மை ஒன்று" பாடல் தான். :-)
இசையின்பத்தில் இசைக்கருவிகள் பற்றியெல்லாம் பதிவு போடும் போது,ஒவ்வொரு இசைக்கருவி எப்படி நமது மனதை பாடலின் உணர்வோடு உறவாட வைத்துவிடுகின்றது என எழுதியிருக்கிறேன். ஆனால் இந்த பாடலை பொருத்த வரை அந்த வேலையை இசையரசியின் அழகான குரல் செய்து விடுகிறது. பாடலின் ஆரம்பத்தில் அவர் ஹம் செய்யும் பொழுதே,நம் மனது மகுடிக்கு மயங்கிய நாகம் போல் பாடலுக்கு முன் கிறங்கிப்போய் விடும். பிறகு பாடல் முழுதும் இனிமையான குரல்,வயலின்.வீணை,புல்லாங்குழல் ஆகிய வாத்தியங்களின் தெய்வீக இசை மற்றும் மு.மேத்தாவின் மனதை வருடும் வரிகள் என பாடல் முழுமையாக ஒரு உணர்ச்சி கடலில் நம்மை மூழ்கடித்து விடும்.
அதுவும் கடைசியில் "தாய் அன்புக்கே ஈடேதம்மா,ஆகாயம் கூட அது போறாது. தாய் போல யார் வந்தாலுமே,உன் தாயை போலே அது ஆகாது" என்று சொல்லும் போது நான் அப்படியே உருகி விடுவேன்.
பாடலை கேட்டு முடித்த பின் ஒரு வித உணர்ச்சி வசப்பட்ட மன நிலையிலோ ,கண்களில் தண்ணீர் எட்டி பார்ப்பது போலோ இருந்தால் "என்ன ஆச்சு எனக்கு?? ஏன் ஒரு பாட்டுக்கு இவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறேன்" என்று உங்களையே கடிந்து கொள்ளாதீர்கள்.
உங்களையும் என்னையும் போன்ற பல்லாயிரக்கணக்கானோர் இங்கு உண்டு.
நம்மில் எந்த குறையும் இல்லை. எல்லாம் இந்த பாட்டுக்கு உள்ள சிறப்பு!! :-)
படம் : கேளடி கண்மனி
பாடல் : கற்பூர பொம்மை ஒன்று
இசை : இளையராஜா
பாடலாசிரியர் : மு.மேத்தா
கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கை கோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
(கற்பூர.....
பூந்தேரிலே நீ ஆடவே உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்
மானே உன் வார்த்தை ரீங்காரம் மலரே என் நெஞ்சில் நின்றாடும்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
(கற்பூர.....
தாய் அன்பிற்கே ஈடேதம்மா ஆகாயம் கூட அது போதாது
தாய் போல் யார் வந்தாலுமே உன் தாயை போலே அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல் உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
(கற்பூர.....