Showing posts with label Ilayaraja. Show all posts
Showing posts with label Ilayaraja. Show all posts
2 comments

இசைஞானி இளையராஜா இசையில் இதுவரையில் இசையரசி பி.சுசீலா பாடி வெளிவந்த பாடல் எது?

இந்தக் கேள்வியைப் பொதுவில் கேட்ட பொழுது “கற்பூர முல்லை ஒன்று”, “முத்துமணிமால” என்று ஓரளவு நெருங்கிய விடைகள் கிடைத்தன. ஆனால் அந்தப் பாடல்களுக்குப் பிறகும் ஒரு பாடல் வெளிவந்திருக்கிறது 1993ல்.

இளையராஜாவின் இசையில் முதன்முதலாக பாடல் பதிவு செய்யப்பட்டது பி.சுசீலா மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் குரலில். ஆனால் அந்தப் படம் எடுக்கப்படாமலே மறைந்தது. அந்தப் பாடலையோ அதன் மெட்டையோ வேறெங்கேனும் இளையராஜா பயன்படுத்தியிருக்கின்றாரா என்பது குறித்து தகவல் இல்லை.

அன்னக்கிளி படத்தில் ராஜா இசையில் சுசீலாம்மா பாடிய முதற்பாடல் திரையில் வந்தால், அரண்மனைக்கிளி படத்தில் இந்தப் பாடல் வந்திருக்கிறது. இதைக் கடைசிப் பாடல் என்று சொல்ல மனம் ஒப்பவில்லை.

1993ல் ராஜ்கிரண் நடித்து வெளிவந்த படம் அரண்மனைக்கிளி. அந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே நல்ல பாடல்கள்.

அப்படியிருக்க அந்தப் படத்தில் முதல் பாடலாக வருவதுதான் “நட்டு வெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா”.

ஒரு நாடோடிக் கூட்டம். அதில் ஒருத்தி பருவம் அடைந்திருக்கிறாள். அவளுக்கு அந்தக் கூட்டம் சீர் செய்து பாடும் பாடல்தான் இது.

1993 என்பது இசையரசி பி.சுசீலா பாட வந்து நாற்பதாண்டுகளுக்குப் பிறகான காலகட்டம். இசைப்புயல் வேகமாக வீசிக் கொண்டிருந்த காலகட்டத்திலும் தன்னுடைய குரல் இன்றளவும் புதுமையானதே என்று மீண்டுமொருமுறை நிரூபித்த பாடல்.

திரும்பத் திரும்பச் சொன்னாலும் சுசீலாம்மாவின் தமிழ் உச்சரிப்புக்கு இன்றும் ஒரு மாற்று இல்லை என்பதே உண்மை. அதைச் சொல்லத் தயங்கவும் தேவையில்லை. ஒவ்வொரு சொல்லும் துல்லியமாக நமது காதில் விழுகிறது.

இந்தப் பாடலோடு நின்று விடாமல் இந்தக் கூட்டணியில் இன்னுமொரு பாட்டு கிடைத்தால் நாம் எல்லாரும் மகிழ்வோம்.

சரி. இப்போது இந்தப் பாட்டை நாமெல்லாம் ரசிப்போம்.



அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

1 comments

இசையரசி பதிவில் என் பங்குக்குப் பாட்டுப் போட்டு நீண்ட நாட்களாகிவிட்டது. எனவே அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் முகமாக ஒரு பாடல். இன்று வேலை முடிந்து களைப்போடு இரவு உணவை எடுத்துக் கொண்டிருக்கும் போது ஜெயா டிவியில் வந்த இந்தப் பாடலை கிட்டத்தட்ட பத்து வருஷங்களுக்குப் பின்னர் கேட்கிறேன்.

"சட்டம் என் கையில்" படத்தில் வரும் "ஒரே இடம் நிரந்தரம்...இதோ உன் துணை, இதோ என் இசை" என்ற இந்தப் பாடலைப் பாடியிருப்பவர் பி.சுசீலா. இடையில் மலேசியா வாசுதேவன் என்று நினைக்கிறேன், அல்லது அவர் சாயலில் ஒரு ஆண் குரலில் ஹம்மிங் ஒலிக்கிறது இந்தப் பாடல். இசையமைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. ராஜாவின் ஆரம்ப காலப் பாடல்கள் சிலவற்றில் எம்.எஸ்.விஸ்வநாதனின் பாதிப்பு இருக்கும். அந்த உணர்வை இந்தப் பாடலும் ஏற்படுத்துகின்றது. பி.சுசீலா தவிர்த்து வேறு யாராவது பாடியிருந்தால் அந்த சாயல் பெரிதாகத் தெரிந்திருக்காது என்று நினைக்கும் போது பாடலை ஒலிக்க விட்டுப் பின்னணியில் போகும் இசையைக் கேட்டால், அதில் வரும் பேஸ் கிட்டாரும் எம்.எஸ்.வி ரகமாக இருக்கிறது.

ஒரு விரகதாப சூழ்நிலைக்கு எடுக்கப்பட்ட பாடல் என்றாலும் லேசான சோகம் கலந்த உணர்வு கேட்கம் போது எழாமல் இல்லை, அதுவே இந்தப் பாடலின் தனித்துவம் ஆகி விடுகின்றது.


9 comments

இவரை வில்லியாகத்தான் நிறையப் படங்களில் பார்த்திருப்பீர்கள். அல்லது சிங்காரிச் சரக்கு மாதிரி பாடல்களில் கவர்ச்சியாகத்தான் பார்த்திருப்பீர்கள். ஆம். நடிகை ஒய்.விஜயாவைத்தான் சொல்கிறேன்.




சில நடிகைகள் வில்லிகளாகவே வாழ்ந்து விடுகிறார்கள். சி.கே.சரஸ்வதிக்குப் பிறகு ஒய்.விஜயாவிற்கு அந்த வாய்ப்பு. ஆனாலும் இவருக்கும் ஒரு இனிய பாடலும் பாத்திரமும் ஒரு சில படங்களில் கிடைத்திருக்கின்றன.

அப்படியொரு படமே "அவர் எனக்கே சொந்தம்". ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா, படாபட் ஜெயலட்சுமி ஆகியோர் பெரிய பாத்திரங்கள் ஏற்று நடித்த படத்தில் கைம்பெண் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஒய்.விஜயா. ஒரு குழந்தைக்குத் தாய்ப் பாத்திரத்தில் நடித்த அவருக்கு இளையராஜாவின் இசையில் ஒரு இனிய பாடலும் கூட உண்டு. ஆம். இசையரசியின் அமுதக் குரலில் "தேனில் ஆடும் ரோஜா" என்று பாடிக் குழந்தைக்குச் சோறு ஊட்டுகிறார். இந்த இனிய பாடலைக் கண்டும் கேட்டும் ரசியுங்கள்.



சென்னையில் இந்தப் படத்தில் ஒளித்தகடு கிடைத்ததும் வாங்கி விட்டேன். பாடல்கள் அனைத்தையும் வலையேற்றியும் விட்டேன். இந்தப் படத்தில் தொலினேனு ஜேயு என்ற தியாகராஜர் கீர்த்தனையையும் கபிகபி மேரே தில் மே என்ற பாடலையும் டி.எம்.சௌந்தரராஜனை நகைச்சுவை நையாண்டியோடு பாட வைத்திருக்கிறார் இளையராஜா. அதற்கு நடித்திருப்பவர் வி.கே.ராமசாமி. பாட்டைக் கேளுங்கள். இலவசமாக அந்தப் பாடலையும் இங்கேயே தருகிறேன்.



அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்