
இந்தாம்மா கருவாட்டுக் கூட முன்னால போ
தேனாம்பேட்ட சூப்பர் மார்க்கெட் எறங்கு
நன்னா சொன்னேள் போங்கோ
இந்த மூனையும் கேட்டா ஒங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்? எனக்கு ஒரு பாட்டு நினைவுக்கு வரும். பஸ் பாட்டு அது.
சிட்டுக்குருவி. அதுதான் படத்தோட பேரு. அந்தப் படத்துல வர்ர "என் கண்மணி உன் காதலி" அப்படீங்குற பாட்டுதான் நான் சொல்றது. இசையரசியும் பாடும் நிலாவும் பாடிய பாட்டு. ரொம்ப அருமையான காதல் பாட்டு.
இந்தப் பாட்டுல ஒரு சிறப்பு என்ன தெரியுமா? கவுண்டர்...இல்ல இல்ல...Counter முறையில உருவான மொதத் தமிழ்ப் பாட்டு இது. புரியலையா? கீழ பாட்டோட சில வரிகளைக் கொடுத்திருக்கேன். படிங்க அத. அப்புறமா விளக்குறேன்.
என் கண்மனி
உன் காதலி
இளமாங்கனி
உனைப் பார்த்ததும்
சிரிக்கின்றதேன்
சிரிக்கின்றதேன்
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ
நன்னா சொன்னேள் போங்கோ
என் மன்னவன்
உன் காதலன்
எனைப் பார்த்ததும்
ஓராயிரம்
கதை சொல்கிறான்
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ
வரிகளைப் படிச்சீங்கள்ள. இதுல 1, 3, 5, 7ன்னு படிச்சா ஒரு பாட்டு. 2, 4, 6, 8ன்னு படிச்சா இன்னோரு பாட்டு. மேல உள்ள வரிகளையே நான் மாத்திக் குடுக்குறேன் பாருங்க. ரெண்டு பாட்டு கிடைக்கும்.
பாட்டு - 1
என் கண்மனி
இளமாங்கனி
சிரிக்கின்றதேன்
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ
நன்னா சொன்னேள் போங்கோ
என் மன்னவன்
எனைப் பார்த்ததும்
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
பாட்டு - 2
உன் காதலி
உனைப் பார்த்ததும்
சிரிக்கின்றதேன்
நீ நகைச்சுவை மன்னனில்லையோ
நன்னா சொன்னேள் போங்கோ
உன் காதலன்
ஓராயிரம்
கதை சொல்கிறான்
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ
மொத்தமாக் கேட்டாலும் ஒரு பாட்டு. ஆகா ஒன்னுக்குள்ள மூனு. இதப் படம் பிடிக்கிறப்போ பாட்டோட சிறப்பு சிதையாமப் படம் பிடிச்சிருக்காங்க. இந்தச் சுட்டிக்குப் போங்க. பாட்டப் பாக்கலாம். இப்பிடியொரு பாட்டை எழுதுனது யார் தெரியுமா? வேற யாரு? நம்ம வாலிதான். அவருடைய கவிதை வாளி எப்பொழுதும் ஆகாது காலி.
இந்தப் பாட்டுக்கு இளையராஜா இசை. அருமையான இசை. கிட்டத்தட்ட இதே மாதிரி முயற்சி நடிகர் திலகம் நடிச்ச இமயம் படத்துலயும் உண்டு. கங்கை யமுனை இங்குதான் சங்கமம் அப்படீங்குற பாட்டு. மெல்லிசை மன்னர் கவியரசர் கூட்டணி. ஏசுதாசும் வாணி ஜெயராமும் பாடியது. ஆனா அங்க வேற மாதிரி. ஆண் ஒரு வரி...பெண் ஒரு வரி பாடுறதில்லை. ஒரு வரியவே பிச்சி....ஆண் ஒரு சொல்...பெண் ஒரு சொல்னு பாடுறது. நம்ம தமிழுக்குக் கிடைச்ச பெரிய இசையமைப்பாளர்கள் நெறைய செஞ்சிருக்காங்க. அவங்க செஞ்சதப் புரிஞ்சு அனுபவிக்கிற அருமை நமக்குத்தான் இல்லை.
அன்புடன்,
கோ.இராகவன்