80 கள் நடிகை ராதிகாவுக்குப் பொற்காலம் என்று தான் சொல்ல வேண்டும். நிறையப் படங்கள் இவரை மையப்படுத்தியே வந்திருந்தன. குறிப்பாக கலைஞர் கருணாநிதியின் வாயால் "கலையரசி" என்ற பட்டத்தையும் பெற்றதோடு அவரின் வசனத்தில் மிளிர்ந்த பல படங்களில் நடித்திருக்கின்றார் ராதிகா. கூடவே எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் வெளிவந்தவை தான் பல.
இங்கே ஒலிக்கப் போகும் பாடல் தென்றல் சுடும் என்ற திரையில் இருந்து ஒலிக்கின்றது. கலைஞர் கருணாநிதியின் வசனத்தில் மனோபாலா இயக்கியது இப்படம். "Return to Eden" என்ற அவுஸ்திரேலியத் தொலைக்காட்சித் தொடர் பின்னர் ஹிந்தியில் நடிகை ரேகாவை வைத்து " Khoon Bhari Maang" வெளிவந்திருந்தது. அப்படமே "தென்றல் சுடும்" திரையின் மூலக் கரு.
கதாநாயகி வரிசையில் ராதிகாவைத் தேர்ந்தெடுத்து விட்டு இசையரசி பி.சுசீலாவின் குரலில் ராதிகா நடித்த இரண்டு பாடல்களில் எதை எடுப்பது என்று முதலில் திணறி விட்டேன். முதலில் "நினைவுச் சின்னம்" திரையில் வந்த "ஏலே இளங்கிளியே என்னாசைப் பைங்கிளியே" பாடலை எடுக்கலாமா என்று சபலம் தட்டியது. ஆனால் வெற்றி பெற்றதே "தென்றல் சுடும்" திரையில் வரும் "தூரி தூரி தும்மக்க தூரி" என்ற பாடல்.
இந்தப் பாடல் படத்தில் குழந்தைகளோடு ராதிகா பாடும் சந்தோஷ மெட்டிலும், பின்னர் இழந்த குழந்தைகளை நினைத்துப் பாடும் சோகராகமாக இரு வடிவில் இருக்கும். இங்கே நான் தருவது சோக மெட்டு. வழக்கமாக ராஜா இசையில் வரும் குடும்பப் பாட்டுக்கு விலக்காக புதுமாதிரி கிட்டார் இசையும் வாலியின் வரிகளுமாக குதூகலிக்கும் பாட்டு இது.
இசைஞானி இளையராஜாவின் இசையில் இசையரசி பி.சுசீலா பாடும் இந்த இனிய பாடலைக் கேட்டு மகிழுங்கள். வலையுலக சுட்டிப்பதிவர்களுக்கும் இப்பாடல் சமர்ப்பணம் ;-)