
இசைஞானி இளையராஜா இசையில் இதுவரையில் இசையரசி பி.சுசீலா பாடி வெளிவந்த பாடல் எது?
இந்தக் கேள்வியைப் பொதுவில் கேட்ட பொழுது “கற்பூர முல்லை ஒன்று”, “முத்துமணிமால” என்று ஓரளவு நெருங்கிய விடைகள் கிடைத்தன. ஆனால் அந்தப் பாடல்களுக்குப் பிறகும் ஒரு பாடல் வெளிவந்திருக்கிறது 1993ல்.
இளையராஜாவின் இசையில் முதன்முதலாக பாடல் பதிவு செய்யப்பட்டது பி.சுசீலா மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் குரலில். ஆனால் அந்தப் படம் எடுக்கப்படாமலே மறைந்தது. அந்தப் பாடலையோ அதன் மெட்டையோ வேறெங்கேனும் இளையராஜா பயன்படுத்தியிருக்கின்றாரா என்பது குறித்து தகவல் இல்லை.
அன்னக்கிளி படத்தில் ராஜா இசையில் சுசீலாம்மா பாடிய முதற்பாடல் திரையில் வந்தால், அரண்மனைக்கிளி படத்தில் இந்தப் பாடல் வந்திருக்கிறது. இதைக் கடைசிப் பாடல் என்று சொல்ல மனம் ஒப்பவில்லை.
1993ல் ராஜ்கிரண் நடித்து வெளிவந்த படம் அரண்மனைக்கிளி. அந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே நல்ல பாடல்கள்.
அப்படியிருக்க அந்தப் படத்தில் முதல் பாடலாக வருவதுதான் “நட்டு வெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா”.
ஒரு நாடோடிக் கூட்டம். அதில் ஒருத்தி பருவம் அடைந்திருக்கிறாள். அவளுக்கு அந்தக் கூட்டம் சீர் செய்து பாடும் பாடல்தான் இது.
1993 என்பது இசையரசி பி.சுசீலா பாட வந்து நாற்பதாண்டுகளுக்குப் பிறகான காலகட்டம். இசைப்புயல் வேகமாக வீசிக் கொண்டிருந்த காலகட்டத்திலும் தன்னுடைய குரல் இன்றளவும் புதுமையானதே என்று மீண்டுமொருமுறை நிரூபித்த பாடல்.
திரும்பத் திரும்பச் சொன்னாலும் சுசீலாம்மாவின் தமிழ் உச்சரிப்புக்கு இன்றும் ஒரு மாற்று இல்லை என்பதே உண்மை. அதைச் சொல்லத் தயங்கவும் தேவையில்லை. ஒவ்வொரு சொல்லும் துல்லியமாக நமது காதில் விழுகிறது.
இந்தப் பாடலோடு நின்று விடாமல் இந்தக் கூட்டணியில் இன்னுமொரு பாட்டு கிடைத்தால் நாம் எல்லாரும் மகிழ்வோம்.
சரி. இப்போது இந்தப் பாட்டை நாமெல்லாம் ரசிப்போம்.
அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்