"நெற்றிக்கண்" திரைப்படம் 1981 ஆம் ஆண்டு கே.பாலசந்தரின் கவிதாலயா தயாரிப்பு நிறுவனம் சார்பில் அன்றைய மசாலா இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்திருந்தது. முன்னர் கலாகேந்திரா என்ற நிறுவனம் மூலம் நண்பர்களுடன் கூட்டாகத் தயாரிப்பில் ஈடுபட்ட பாலசந்தர் சொந்தமாக கவிதாலயா நிறுவனத்தைப் பின்னர் ஆரம்பித்திருந்தார்.
என் நினைவுக்கு எட்டியவரை கவிதாலயாவின் முதல் தயாரிப்பு "நெற்றிக்கண்" தான். இந்தப் படத்தில் மன்மதராஜாவாக தந்தை ரஜினி, சிறீ ராமன் குணாம்சத்தில் மகன் ரஜனி என்று இரட்டை வேடமிட்டிருப்பார்கள். கூடவே சரிதா, மேனகா போன்றோர் நடித்திருப்பார்கள்.
இப்படத்தில் "ராமனின் மோகனம்", "தீராத விளையாட்டுப் பிள்ளை", போன்ற அருமையான பாடல்களுடன் முத்தாய்ப்பாக "மாப்பிளைக்கு மாமன் மனசு, மாமனுக்கோ காமன் மனசு" என்ற பாடலும் இருக்கும். பி.சுசீலா அம்மாவுடன் மலேசியா வாசுதேவன் இணைந்து பாடியிருக்கின்றார். இப்பாடலின் சிறப்பு என்னவென்றால் பொதுவாக அடக்கமாக வந்த பாடல்கள் பலவற்றுக்குச் சொந்தக்காரியான பி.சுசீலா சற்றே வேகமெடுத்துப்பாடியிருப்பார். கண்ணதாசன் வரிகளில் மாமனை எள்ளி நகையாடும் பாடல் வரிகளை அனாயசமாகப் பாடியிருப்பார்.
இன்னும் ஒன்று முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது. அது இப்பாடலுக்கு இளையராஜாவால் வழங்கப்பட்ட இசை. இதே படத்தில் "தீராத விளையாட்டுப் பிள்ளை" பாடலை மேற்கத்தேயப் பாணியில் வித்யாசமாகக் கொடுத்தது போல, "மாப்பிளைக்கு மாமன் மனசு" பாடலில் கர்நாடக இசையையும் மேற்கத்தேய இசையையும் கலந்து குழைத்துக் கொடுத்திருக்கின்றார் இளையராஜா. நுட்பமாக ஆழ்ந்து அனுபவிக்கும் போது இப்பாடலில் கொடுத்திருக்கும் ஜிகல் பந்தியை ரொம்பவே ரசிக்கலாம். இதோ பாடலைக் கேட்டு ரசியுங்கள்.
இசையரசி திரையுலகம் நுழைந்தது முதல் பாடிய பாடல்கள் ஏராளம் என்றால்...அந்தப் பாடல்களுக்கு நடித்த நடிகைகளும் ஏராளம். அப்படி ஒவ்வொரு நடிகைக்கும் ஒவ்வொரு பாடலை எடுத்துக்காட்டும் முயற்சிதான் இந்தக் கதாநாயகி வரிசை.
முதல் கதாநாயகியாக நாம் பார்க்கப் போவது குஷ்பு. என்னடா...எத்தனையோ மணியான பாடல்களைப் பல கதாநாயகிகளுக்கும் பாடியிருக்கும் போது....குஷ்புவிலா தொடங்குவது என்று கேட்கலாம். குஷ்பு நடிக்க வந்த பொழுது பி.சுசீலா திரையுலகில் பாடிக்கொண்டிருந்தாலும் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படியிருந்தும் குஷ்புவிற்கு ஒரு அருமையான பாடலை இசையரசி பாடியிருக்கிறார்.
பொங்கல பொங்கல வைக்க மஞ்சள மஞ்சள எடு தங்கச்சி தங்கச்சி தங்கச்சி நஞ்சையும் புஞ்சையும் இந்தப் பூமியும் சாமியும் என்றும் நம்கட்சி நம்கட்சி நம்கட்சி
ஆமாம். வருஷம் 16. மாபெரும் வெற்றி பெற்ற படம். பாசில், குஷ்பூ, கார்த்திக் ஆகியோருக்கு நல்லதொரு முன்னேற்றத்தைக் கொடுத்த படம்.
இளையராஜாவின் இசையில் வந்த மிகவும் அருமையானதொரு பாடல். காதல் துளிர்த்த பொழுதில் பாடும் பாடல். பூப்பூக்கும் மாசம் தைமாசம் என்று கேட்கும் போதே ஒரு மகிழ்ச்சி பரவுமே. இதோ இந்தச் சுட்டிக்குச் செல்லுங்கள். பாடலைப் பார்க்கவும் கேட்கவும் முடியும். கேட்டு ரசியுங்கள். அஞ்சலிதேவிக்கும் சாவித்திரிக்கும் பத்மினிக்கும் கே.ஆர்.விஜயாவிற்கும் பொருந்திய குரல் குஷ்புவிற்கும் அழகாகப் பொருந்துவதைப் பாருங்கள்.
இசையரசியின் தமிழ் உச்சரிப்பு குறித்துச் சொல்லிச் சொல்லி முடியவில்லை. பூமியும் என்று ஒரு சொல் பாட்டில் வருகிறது. bhoomi என்று அதைப் பொதுவாக உச்சரிப்போம். ஆனால் இந்தப் பூமியில் என்று வருகையில் நடுவில் ப் என்ற ஒற்று இருக்கிறது. முறையாகத் தமிழைச் உச்சரித்தால் இந்தப் poomiyum என்று வரும். அதை இசையரசியின் குரலிலும் இந்தப் பாட்டில் கேட்கலாம்.
குஷ்புவிற்கு வேறு எந்தப் பாடலும் பாடியிருக்கிறாரா என்று தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள். இது ஒன்றுதான் என்று வைத்துக் கொண்டாலும்.....முத்தான பாடல்.
சுசீலா − எல்.ஆர்.ஈஸ்வரி ஜோடிக்குரலில் ஒலித்த பாடல்கள் அனைத்தும் அருமை
அதே போல் 70'களில் மற்றும் 80'களில் சுசீலா − வாணிஜெயராம் இணைந்து பல அருமையான பாடல்களை நமக்கு தந்திருக்கின்றனர்
இந்த ஜோடிக்குரல் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எல்லா மொழிகளிலும் இவர்களது ஜோடிக்குரலில் பல அருமையான பாடல்கள் பாடியிருக்கின்றனர்
அப்படிப்பட்ட ஒரு பாடல் தான் இது படம்:எனிக்கும் ஒரு தெவசம் இசை: ஷ்யாம் வரிகள்: ஸ்ரீகுமாரன் தம்பி கிளாசிகல் வகையில் அமைந்த இந்த அருமையான பாடலை கேட்டு மகிழுங்கள்
இன்றைக்கு சில்க் ஸ்மிதா அவர்களின் நினைவு நாள். செப்டம்பர் 23. அவர்களை நினைவு கூறும் விதமாக இந்தப் பாட்டை உங்களுக்கு இசையரசி வலைப்பூ வழியாக உங்களுக்குக் கொடுக்கிறோம். ஒலி மட்டுமல்ல. ஒளியும்தான்.
சில்க் ஸ்மிதாவிற்கு எஸ்.ஜானகி நிறைய பாடியிருக்கிறார். எல்.ஆர்.ஈஸ்வரியும் வாணி ஜெயராமும் கூடப் பாடியிருக்கிறார்கள். ஆனால் இசையரசியின் குரலில் தேடினால் இந்த ஒரு பாட்டுதான் எனக்குக் கிடைத்தது. நல்லதொரு பாடல்.
வாழ்க்கை என்ற திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் வெளி வந்த "மெல்ல மெல்ல என்னைத் தொட்டு" என்ற இனிய பாடல். உடன் பாடியவர் பெயர் ராஜ் சீத்தாராமன் என்று போட்டிருக்கிறார்கள். இவர் பாடிய வேறு பாடல்கள் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.
இந்தப் பாடலை youtubleல் வலையேற்றிய நண்பருக்கு நன்றி.
இசையரசியிடம் கேளுங்கள் சற்றுத் தாமதாமாகிறது.
நண்பர்களே, உங்களிடம் இசையரசியிடம் கேளுங்கள் என்று கேள்விகள் வாங்கினோம். அது சற்றுத் தாமதமாகிறது. இசையரசியின் உடல் நலம், வெளிநாட்டுப் பயணம், ஐதராபாத் பயணம் ஆகிய காரணங்களால் தள்ளிப் போனது. பிறகு நமக்கு உதவி செய்த நண்பர் மும்பைக்கு மாற்றலாகிச் சென்று விட்டார். ஆகையால் வேறொரு நண்பர் வழியாக முயற்சி செய்கிறோம். கண்டிப்பாகச் செய்து தருவதாகச் சொல்லியிருக்கிறார். அவருக்கு நன்றி. ஏற்பட்ட இந்த தாமதத்தைப் பொறுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். விரைவில் உங்களுக்கு விடைகளைத் தருவோம் என்று நம்புகிறேன்.