இந்தாம்மா கருவாட்டுக் கூட முன்னால போ
தேனாம்பேட்ட சூப்பர் மார்க்கெட் எறங்கு
நன்னா சொன்னேள் போங்கோ
இந்த மூனையும் கேட்டா ஒங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்? எனக்கு ஒரு பாட்டு நினைவுக்கு வரும். பஸ் பாட்டு அது.
சிட்டுக்குருவி. அதுதான் படத்தோட பேரு. அந்தப் படத்துல வர்ர "என் கண்மணி உன் காதலி" அப்படீங்குற பாட்டுதான் நான் சொல்றது. இசையரசியும் பாடும் நிலாவும் பாடிய பாட்டு. ரொம்ப அருமையான காதல் பாட்டு.
இந்தப் பாட்டுல ஒரு சிறப்பு என்ன தெரியுமா? கவுண்டர்...இல்ல இல்ல...Counter முறையில உருவான மொதத் தமிழ்ப் பாட்டு இது. புரியலையா? கீழ பாட்டோட சில வரிகளைக் கொடுத்திருக்கேன். படிங்க அத. அப்புறமா விளக்குறேன்.
என் கண்மனி
உன் காதலி
இளமாங்கனி
உனைப் பார்த்ததும்
சிரிக்கின்றதேன்
சிரிக்கின்றதேன்
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ
நன்னா சொன்னேள் போங்கோ
என் மன்னவன்
உன் காதலன்
எனைப் பார்த்ததும்
ஓராயிரம்
கதை சொல்கிறான்
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ
வரிகளைப் படிச்சீங்கள்ள. இதுல 1, 3, 5, 7ன்னு படிச்சா ஒரு பாட்டு. 2, 4, 6, 8ன்னு படிச்சா இன்னோரு பாட்டு. மேல உள்ள வரிகளையே நான் மாத்திக் குடுக்குறேன் பாருங்க. ரெண்டு பாட்டு கிடைக்கும்.
பாட்டு - 1
என் கண்மனி
இளமாங்கனி
சிரிக்கின்றதேன்
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ
நன்னா சொன்னேள் போங்கோ
என் மன்னவன்
எனைப் பார்த்ததும்
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
பாட்டு - 2
உன் காதலி
உனைப் பார்த்ததும்
சிரிக்கின்றதேன்
நீ நகைச்சுவை மன்னனில்லையோ
நன்னா சொன்னேள் போங்கோ
உன் காதலன்
ஓராயிரம்
கதை சொல்கிறான்
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ
மொத்தமாக் கேட்டாலும் ஒரு பாட்டு. ஆகா ஒன்னுக்குள்ள மூனு. இதப் படம் பிடிக்கிறப்போ பாட்டோட சிறப்பு சிதையாமப் படம் பிடிச்சிருக்காங்க. இந்தச் சுட்டிக்குப் போங்க. பாட்டப் பாக்கலாம். இப்பிடியொரு பாட்டை எழுதுனது யார் தெரியுமா? வேற யாரு? நம்ம வாலிதான். அவருடைய கவிதை வாளி எப்பொழுதும் ஆகாது காலி.
இந்தப் பாட்டுக்கு இளையராஜா இசை. அருமையான இசை. கிட்டத்தட்ட இதே மாதிரி முயற்சி நடிகர் திலகம் நடிச்ச இமயம் படத்துலயும் உண்டு. கங்கை யமுனை இங்குதான் சங்கமம் அப்படீங்குற பாட்டு. மெல்லிசை மன்னர் கவியரசர் கூட்டணி. ஏசுதாசும் வாணி ஜெயராமும் பாடியது. ஆனா அங்க வேற மாதிரி. ஆண் ஒரு வரி...பெண் ஒரு வரி பாடுறதில்லை. ஒரு வரியவே பிச்சி....ஆண் ஒரு சொல்...பெண் ஒரு சொல்னு பாடுறது. நம்ம தமிழுக்குக் கிடைச்ச பெரிய இசையமைப்பாளர்கள் நெறைய செஞ்சிருக்காங்க. அவங்க செஞ்சதப் புரிஞ்சு அனுபவிக்கிற அருமை நமக்குத்தான் இல்லை.
அன்புடன்,
கோ.இராகவன்
ஒரே பாடல் மொழிகள் வேறு
தாழையாம் பூ முடிச்சு என்ற பாடல் எல்லோருக்கும் நினைவிருக்கும்
லீலாவும்,செளந்தரராஜனும் பாடியது
ஆம் பாகப்பிரிவிணை திரையில் சிவாஜியும்,சரோஜாதேவியும் பாடுவதாக அமைந்த பாடல்
2.அதே படம் தெலுங்கில் சாவித்திரி,என்.டி.ஆர் நடிக்க வெளிவந்தது
தமிழில் ஒலித்த பாடலை தெலுங்கில் சுசீலாவும்,கண்டசாலாவும் பாட
இதோ இந்த இனிமையான பாடலை பார்த்து மகிழுங்கள்
3. தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
பாகப்பிரிவிணையில் இந்த பாடலுக்கு தனி சிறப்புண்டு
தமிழில் இந்த படத்தில் சுசீலா பாடிய ஒரே பாடல் ஆனால் மிகவும் பிரபலமான பாடலும் இதுவே
கவியரசரின் வரிகளும்,மெல்லிசை மன்னர்களின் இசையும், இசையரசியின் குரலும் அடேயப்பா
கேளுங்கள் கேட்டு மெய் மறந்து போங்கள்
4. இதே பாடலை தெலுங்கிலும் கேளுங்கள்
குரல் : சுசீலா
5.என்னை விட்டு ஓடிப்போக முடியுமா
குமுதம் திரையில் ஒலித்த இந்த பாடல் சீர்காழியார்,சுசீலா குரல்களில் இஒரு அழகான பாடல்
பாடலாசிரியர் மருதகாசிக்கு தங்க காப்பே போடலாம்
அவ்வளவு அருமையான வரிகள்
(எந்தன் அன்னை தந்தை சம்மதித்த பின்னே...அதுவல்லவோ காதல்)
மகாதேவன் அவர்களின் அற்புத இசையும் இந்த பாடலை அருமையான பாடலாக்கியது என்பது 100% உண்மை
5.இதோ அதே பாடல் தெலுங்கில்
பார்த்து கேட்டு மகிழுங்கள்
இது போல வேறு பாடல்கள் அடுத்த பகுதியில்
ஹம்மிங் பல விதம்
பல பாடல்களில் ஆண் ஹம்மிங் கொடுக்க பெண் பாடுவது போலவும்
இல்லையேல் பெண் ஹம்மிங் கொடுக்க ஆண் பாடுவது போலவும் அமைந்த தமிழ் திரைப்பாடல்கள் ஏராளம்
ஹம்மிங் என்றதுமே நமக்கு சட்டென ஞாபகம் வரும் குரல் எல்.ஆர்.ஈஸ்வரி தான்
ஒரு விதமான husky ஹம்மிங் கொடுக்க இவரால் தான் முடியும்
பின்னர் வந்த வசந்தா, சசிரேகா என பலர் ஹம்மிங் முத்திரை பெற்றனர்
இருந்தாலும் இசையரசி சுசீலாம்மாவின் ஹம்மிங் தனி ரகம்..
பாடலின் வரிகளை ஆண் பாடகர் எவ்வளவு உணர்ந்து பாடினாரோ அதே பாவம் இவரது ஹம்மிங்கிற்கு உண்டு
ஆம் சுசீலா ஹம்மிங் செய்த பல பாடல்கள் உண்டு
உதாரணமாக வெள்ளிக் கின்னம் தான்
ஆனால் இங்கே நாம் பேசப்போவது வேறு சில பாடல்களை பற்றி
சுசீலாம்மா தமிழ் தெலுங்கில் நிறைய பாடியிருந்தாலும், கன்னடம் மலையாளம் மொழிகளில் சிறந்த பாடல்களை சுசீலாம்மா பாடியிருக்கிறார்
அப்படி சுசீலாம்மா ஹம்மிங் செய்த மிகவும் சிறப்பான வேற்று மொழிப்பாடல்களையும், தமிழ் பாடல்களையும் பார்ப்போம்
1. மொழி: கன்னடம்
படம்: சானுக்யா
இசை: சத்யம்
குரல்கள் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலா
பாடல் : மோகினி நவ மோகினி
இந்த பாடலின் தொடக்கமே ஒரு அழகு. சுசீலாவின் துவக்க ஹம்மிங்கை கேளுங்கள் மெய் மறந்து போவீர்கள் பின்னர் பாலுவின் குழைவு அதற்கேற்றார் போல் சுசீலா குழைந்து செய்யும் ஹம்மிங்கும் இந்த பாடலை கன்னட மக்கள் மத்தியின் இன்றும் மறக்க முடியாத பாடலாக்கியிருக்கிறது என்றால் இந்த பாடலின் கம்பீரத்தை என்னவென்று சொல்வது
பாடலை இங்கே கேட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்
2. மொழி : தெலுங்கு
படம்: ஜெகதீகவீருனி கதா
இசை: பெண்டியாலா நாகேஸ்வரராவ்
குரல்கள் : கண்டசாலா,சுசீலா
ஐனதேமோ ஐனதி ..
என்ற இந்த பாடலின் அழகான தாளக்கட்டும், சுசீலாவின்ஹம்மிங்கும்
கண்டசாலா மாஸ்டரின் குரலும்
சரோஜாதேவியின் அழகும்.. என்ன சொல்வது...
பார்த்து மகிழுங்கள்
பாடலை இங்கே பார்த்து மகிழுங்கள்
3. மொழி: கன்னடம்
படம்: அமர சில்பி ஜக்கான்னாச்சாரி
இசை: எஸ்.ராஜேஸ்வரராவ்
குரல்கள்: பீ.பி.ஸ்ரீனிவாஸ்,சுசீலா
பாடல் : நில்லு நீ நில்லு நீ நீலவேணி
பாடலின் ஸ்ரீனிவாஸ் செய்யும் சங்கதிகளை சுசீலா ஹம்மிங்க்கில் செய்துவிடுவார்
அதுவும் ஒலிதுபா நொலிதுபா என்று ஸ்ரீனிவாஸ் பாட சுசீலாவின் ஹம்மிங்க்கும் இணைய ஆஹா ..
அவ்வளவு அழகு இந்த பாடல்
பாடல்காட்சியில் தோன்றியவர்கள் சரோஜாதேவி,கல்யாண்குமார்
4. இதே பாடல் தெலுங்கிலும் வந்தது
குரல்கள் கண்டசாலா,சுசீலா
இதோ அதையும் கேட்டு மகிழுங்கள்
5.யேசுதாஸ் பாட சுசீலா செய்யும் ஹம்மிங் வித்தைகள் இதோ
குங்குமத்திலகம் தெலுங்கு திரைப்படத்தில்
பாடல் ஆலனகா பாலனகா
பாடலை கேளுங்கள்
http://psusheela.org/audio/ra/telugu/all/aalanaga.ram
6. தமிழிலும் சுசீலா எத்தனையோ ஹம்மிங் செய்திருந்தாலும்
வெள்ளிக்கின்னம் தான் பாடலுக்கு தனி சிறப்பு
இதே படத்தில் சுசீலா பாடிய நாளை இந்த வேளை பார்த்து ஓடி வாவிற்கு தேசிய விருது கிடைத்தது
இந்த பாடலில் ஹம்மிங் மட்டுமே செய்து டி.எம்.எஸ்ஸுடன் ஈடாக பாடலில் தெரிவார் சுசீலா
பாடல் இதோ
பாடல்களை கேட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்
ராஜ்
Labels: கன்னடம்
பாடல்கள் பல விதம் உண்டு.அதில் ஒரு வகை என்னவென்றால், பாடல் ஒலிக்க ஆரம்பித்த உடன் உலகத்தில் உள்ள அனைத்து ஒலிகளும் அடங்கி போனாற்போல் இருக்கும். நாம் எந்த மன நிலையில் இருந்தாலும் பாடலின் இசையும் பாடகரின் குரலும் நம்மை சூழ்ந்துக்கொண்டு நம்மை தனி உலகிற்கு அழைத்து சென்றுவிடும். பாடலை கேட்டு முடிக்கும் போது நமது மனது ஒரு விதமான அமைதியான சூழலுக்கு வந்து விடும். மின்னலே படத்தில் வரும் "வசீகரா" பாடல் இந்த விதமான பாடலுக்கு ஒரு நல்ல உதாரணம்.
ஆனால் எனக்கு இது போன்று ஒரு உணர்வை முதன் முதலில் தந்து ,நான் இசையை ரசிக்க ஆரம்பித்து அதற்கு அடிமையாக வைத்த ஒரு பாடலை தான் இன்றைக்கு பார்க்க போகிறோம்.
போன பதிவு போட்ட போது தோன்றியது, அதை எழுதுவதற்கு இவ்வளவு நாள் ஆகிவிட்டது. கண்டு பிடித்து விட்டீர்களா?? ஆமாம், நான் சொல்வது "கேளடி கண்மனி" படத்தில் வரும் "கற்பூர பொம்மை ஒன்று" பாடல் தான். :-)
இசையின்பத்தில் இசைக்கருவிகள் பற்றியெல்லாம் பதிவு போடும் போது,ஒவ்வொரு இசைக்கருவி எப்படி நமது மனதை பாடலின் உணர்வோடு உறவாட வைத்துவிடுகின்றது என எழுதியிருக்கிறேன். ஆனால் இந்த பாடலை பொருத்த வரை அந்த வேலையை இசையரசியின் அழகான குரல் செய்து விடுகிறது. பாடலின் ஆரம்பத்தில் அவர் ஹம் செய்யும் பொழுதே,நம் மனது மகுடிக்கு மயங்கிய நாகம் போல் பாடலுக்கு முன் கிறங்கிப்போய் விடும். பிறகு பாடல் முழுதும் இனிமையான குரல்,வயலின்.வீணை,புல்லாங்குழல் ஆகிய வாத்தியங்களின் தெய்வீக இசை மற்றும் மு.மேத்தாவின் மனதை வருடும் வரிகள் என பாடல் முழுமையாக ஒரு உணர்ச்சி கடலில் நம்மை மூழ்கடித்து விடும்.
அதுவும் கடைசியில் "தாய் அன்புக்கே ஈடேதம்மா,ஆகாயம் கூட அது போறாது. தாய் போல யார் வந்தாலுமே,உன் தாயை போலே அது ஆகாது" என்று சொல்லும் போது நான் அப்படியே உருகி விடுவேன்.
பாடலை கேட்டு முடித்த பின் ஒரு வித உணர்ச்சி வசப்பட்ட மன நிலையிலோ ,கண்களில் தண்ணீர் எட்டி பார்ப்பது போலோ இருந்தால் "என்ன ஆச்சு எனக்கு?? ஏன் ஒரு பாட்டுக்கு இவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறேன்" என்று உங்களையே கடிந்து கொள்ளாதீர்கள்.
உங்களையும் என்னையும் போன்ற பல்லாயிரக்கணக்கானோர் இங்கு உண்டு.
நம்மில் எந்த குறையும் இல்லை. எல்லாம் இந்த பாட்டுக்கு உள்ள சிறப்பு!! :-)
Ilayaraja - Keladi... |
படம் : கேளடி கண்மனி
பாடல் : கற்பூர பொம்மை ஒன்று
இசை : இளையராஜா
பாடலாசிரியர் : மு.மேத்தா
கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கை கோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
(கற்பூர.....
பூந்தேரிலே நீ ஆடவே உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்
மானே உன் வார்த்தை ரீங்காரம் மலரே என் நெஞ்சில் நின்றாடும்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
(கற்பூர.....
தாய் அன்பிற்கே ஈடேதம்மா ஆகாயம் கூட அது போதாது
தாய் போல் யார் வந்தாலுமே உன் தாயை போலே அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல் உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
(கற்பூர.....
Labels: இளையராஜா
சமீபத்தில் குமுதம் வாரயிதழில் கேள்விபதில் சொல்லிக் கொண்டிருக்கிறார் வைரமுத்து. அதில் ஒரு கேள்வியில் அவருக்குப் பிடித்த பாடகியான இசையரசி பி.சுசீலா அவர்களைப் பற்றிச் சொல்லும்படிக் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் கொடுத்த விடை இங்கே.
இதோ வைரமுத்து எழுதி இசையரசி பாடிய ஒரு பாடல். வி.எஸ்.நரசிம்மன் இசையில் அச்சமில்லல அச்சமில்லை என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற மலேசியா வாசுதேவன் உடன் பாடிய ஓடுகிற தண்ணியில என்ற அழகான பாடல்.
அன்புடன்,
கோ.இராகவன்
Labels: எம்.எஸ்.விஸ்வநாதன், வைரமுத்து
ஆம். வலைப்பூ வரலாற்றில் முதன்முறையாக ஒரு முயற்சி. எத்தனையோ பேட்டிகளைப் படித்திருப்பீர்கள். ஆனால் இங்கே பேட்டி எடுக்கப் போவதே நீங்கள்தான். யாரை? இசையரசி பி.சுசீலா அவர்களைத்தான். இசையரசியிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை என்னுடைய gragavan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். உங்கள் கேள்விகளுக்கு சென்னையிலிருக்கும் இசையரசியிடமிருந்து பதில் பெற்றுத் தரப்படும். கேள்வி என்றில்லை. இசையரசியிடம் நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்திகளையும் வாழ்த்துகளையும் அனுப்புங்கள். உங்கள் கேள்விகளுக்காகவும் வாழ்த்துகளுக்காகவும் இசையரசி காத்துக்கொண்டிருக்கிறார். இசையரசிக்கு வலைப்பூ அன்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றி பல.
கேள்விகளை அனுப்பக் கடைசி நாள் ஜூலை 17.
எப்படிப் பட்ட கேள்விகள் நீங்கள் அனுப்ப வேண்டும் என்று நான் பாடம் எடுக்கப் போவதில்லை. நல்ல கேள்விகள் உங்களிடமிருந்து வரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்.
கேள்விகளை யுனிகோடு தமிழிலோ, ஆங்கிலத்திலோ அனுப்பலாம். உடன் உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் வலைப்பூ முகவரியையும் குறிப்பிடவும்.
நமக்காக இசையரசியிடம் பேசி உதவ ஒத்துக்கொண்ட ராஜகோபால் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றி.
இதோ உங்களுக்காக ஒரு இனிய பாடல்.
உங்கள் ஆதரவையும் அன்பையும் எதிர்பார்க்கும்,
கோ.இராகவன்
Labels: கேள்வி பதில்
இன்றைக்கு வேறு ஒரு பாட்டு பதிவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன்.
ஆனால் இசை இன்பத்தில் சாரங்கி பதிவில் அண்ணாத்த ஜிரா ஒரு பின்னூட்டம் போட்டிருந்தாரு. அதை பாத்துட்டு இன்னைக்கு கர்ணன் படத்தோட பாட்டு எல்லாத்தையும் திரும்ப பார்த்தேன்.
அப்படி பாக்கும் போது தான் இந்த பாட்டை திரும்பவும் ரசிச்சு கேட்டேன்.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
அரண்மனையில் ராணியாரால் பாடப்படும் பாடல் என்பதால் பாடலின் ஒரு வித மிடுக்கு நிறம்பியிருக்கும். அது பாடல் படமாக்கப்பட்ட விதத்திலேயும் சரி,பாடலின் இசை அமைப்பிலும் சரி. விசுவனாதன் ராமமூர்த்தியின் இனிமையான மெலடி மெட்டில் சுசீலாவின் குரல் பாலில் தேன் குழைத்தது போல். அவருக்கே உரித்தான மென்மையான மற்றும் கம்பீரமான குரலில் அசத்தியிருப்பார்.
ஜிரா அண்ணா அந்த பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தது போல இந்த படத்தின் பாடல் எல்லாவற்றிலும் சாரங்கி மிக அழகாக பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த பாட்டிலேயும் நடு நடுவே சாரங்கியின் இசையை கேட்கப்பெறலாம். படம் வட இந்தியாவில் அமையப்பெற்றிருப்பதால் (படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடந்தது) அந்த பாதிப்பை நாம் உணர்வதற்காக சிரத்தை எடுத்து இதனை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் விசுவனாதன் மற்றும் ராமமூர்த்தி.இந்த படத்திற்கு முன் இந்த அளவுக்கு சாரங்கியை வேறு எந்த படத்திலேயும் உபயோகித்திருப்பார்களா என்று தெரியவில்லை. தமிழ் சினிமாவில் விசுவனாதன் ராமமூர்த்தி, குறிப்பாக எம்.எஸ்.வியின் பங்களிப்பு கொஞ்சநஞ்சமில்லை. இப்பொழுது நாம் கேட்டுக்கொண்டிருக்கும் தமிழ் மெல்லிசை பாணியை ஆரம்பித்து வைத்தவர்களே அவர்கள் தான்.
பாடலின் கரு ஒன்றும் புதிதல்ல. வேலை பளு காரணமாக தன்னை சரியாக தலைவன் கவனிக்க மாட்டேன் என்கிறான் என்று தோழியிடம் முறையிடுகிறாள் தலைவி. முதல்வன் படத்தில் கூட சமீபத்தில் இது போன்ற ஒரு பாட்டு வந்ததே. எந்த இடம் போனாலும்,எந்த காலம் ஆனாலும் மனிதனின் அடிப்படை தேவைகளும் பிரச்சினைகளும் மாறாது என்று ஜிராவிடம் ஒரு முறை கதைத்தது தான் ஞாபகம் வருகிறது.
சரி நீங்கள் பாட்டை ரசியுங்கள்!! வேறொரு அழகான தமிழ் பாடலுடன் மீண்டும் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன்!!
வரட்டா??
படம் : கர்ணன்
இசை : விசுவனாதன் ராமமூர்த்தி
பாடல் : கண்ணதாசன்
என்னுயிர் தோழி கேளொரு சேதி
இதுதானோ உங்கள் மன்னவன் நீதி
தன்னுயிர் போலே மன்னுயிர் காப்பான்
தலைவன் என்றாயே................. தோழி..
(என்னுயிர்)
அரண்மனை அறிவான் அரியணை அறிவான்
அந்தபுரம் ஒன்று இருப்பதை அறியான்
வருகின்ர வழக்கை தீர்த்து முடிப்பான்
மனைவியின் வழக்கை மனதிலும் நினையான்
(என்னுயிர்)
இன்றேனும் அவன் எனை நினைவானோ
இளமையை காக்க துணை வருவானோ
நன்று ! தோழி நீ தூது செல்வாயோ
நங்கையின் துயர சேதி சொல்வாயோ
(என்னுயிர்)
Labels: கண்ணதாசன்