வணக்கம்

ஆண்டாண்டு காலமாக தான் பாடிய இனிய தமிழ்ப் பாடல்களால் நம்மையெல்லாம் மகிழ்வித்தும் வாழ்வின் பலப்பல சமயங்களில் துணையிருந்தும் உதவியிருக்கும் இசையரசி பி.சுசீலா அவர்களுக்கு இன்று பிறந்த நாள்.

நாட்டில் சிலரைப் பார்க்கையில் இவர் ஏன் பிறந்தார் என்று கேள்வி தோன்றும். இசையரசியின் இன்னிசைப் பாடல்களைக் கேட்கும் பொழுதுதான் இவர் நமக்காகப் பிறந்தார் என்று தோன்றும்.

எத்தனை பாடல்கள்! தாலாட்டும் தாயாக, ஆதரவூட்டும் மனைவியாக, நல்லதொரு தோழியாக, குறும்பு மிக்க சுட்டிப் பெண்ணாக, எழுச்சியூட்டும் புரட்சிப் பெண்ணாக, நம்முடைய நெஞ்சில் இருக்கும் சோகத்தையெல்லாம் நெருப்பிட்டு உருக்கி கண்ணீராய் வழிந்து ஓடச் செய்து மனதை இலேசாக்கும் ஆதரவாக, இறைவன் புகழைப் பாடி நம்மை பரவசத்தில் ஆழ்த்தும் வழிகாட்டியாக என்று பலப்பல உணர்ச்சிகளில் தனது இனிய குரலால் பாடியிருக்கிறார்.

ஒரு முறை இன்னொரு மிகப்பெரிய பாடகியான எஸ்.ஜானகி குறிப்பிட்டார், “இப்பிடி ஒரு சிறப்பான குரல் ஆண்டவனிடத்தில் எவ்வளவு கெஞ்சினாலும் கிடைக்காது.” உண்மை. எஸ்.ஜானகி அவர்களின் பாடும் திறன் இசையரசியின் திறமையை நன்கு உணர்ந்து சொன்ன வாக்கியங்கள். கற்றாரைக் கற்றோரே காமுறுவர்.

இன்றைக்குத் தமிழகத்தில் பிறந்த பாடகர்களே தமிழைக் குதறிப் பாடும் பொழுது, தமிழைச் சரியாக உச்சரியுங்கள் என்று கெஞ்சிக் கேட்கும் தெலுங்கச்சி இவர். ஆந்திர மாநிலத்தின் விஜயநகரத்தில் பிறந்தவர். ஒரு முறை இப்பிடிச் சொன்னார். “நான் பொறந்தது ஆந்திரா. அதுனால தாய்மொழியான தெலுங்கு ஒரு கண். ஆனா என்னோட இன்னொரு கண் தமிழ்.” இதை தனது உச்சகட்டக் காலத்தில் சொல்லியிருந்தால் வாய்ப்பிற்காக சொல்லியிருப்பார் என்று நினைக்கலாம். ஆனால் திரைப்பாடல்கள் வேண்டாம் என்று பக்திப் பாடல்கள் மட்டும் பாடி ஓய்வெடுக்கும் காலத்தில் இப்பிடிச் சொல்ல நல்ல உள்ளம் வேண்டும். உங்களை வணங்குகிறோம் அம்மா. நீங்கள் எங்கு பிறந்தாலும் தமிழர்களாகிய நாங்கள் மார்தட்டிச் சொல்வோம் நீங்கள் தமிழ்ப் பாடகி என்று.

உங்களைத் தமிழ்ப் பாடகி என்று சொல்வது எங்களுக்குப் பெருமைதான். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் நீங்கள் டி.எம்.எஸ் அவர்களோடு இணைந்து பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துதான் இன்றைக்கும் தமிழொலிக்கும் எல்லாப் பள்ளிகளிலும் எல்லா அரசு விழாக்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. உங்களைப் பெற்ற தெலுங்கு மொழிக்குக் கூட பெற முடியாத பெருமையை நமது தமிழ் மொழி உங்களிடம் பெற்றது. அதற்கு முற்றிலும் தகுதியானவர் தாங்கள் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர்.

இன்றைய பொழுது தாயாக நீங்கள் பாடிய சில பாடல்களை நாங்கள் இங்கு கேட்டு மகிழ்கிறோம். தமிழும் இனிமையும் இந்தப் பாடல்களில் உங்கள் குரல்தான் கொடுத்தது. நன்றி. நன்றி.

திரைப்படம் - சிப்பிக்குள் முத்து
இசை - இசைஞானி இளையராஜா
பாடல் - வைரமுத்துதிரைப்படம் - நிலவே மலரே
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல் -திரைப்படம் - கேளடி கண்மணி
இசை - இசைஞானி இளையராஜா
பாடல் - வாலிதிரைப்படம் - புதிய முகம்
இசை - இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்
பாடல் - வைரமுத்துதிரைப்படம் - கடல் மீன்கள்
இசை - இசைஞானி இளையராஜா
பாடல் - கவியரசர் கண்ணதாசன்மீண்டும் ஒரு முறை உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

தமிழுள்ள வரைக்கும் உங்கள் புகழ் நிலைக்கும் என்று வாழ்த்தி வணங்குகிறோம்.

அன்புடன்,
உங்கள் ரசிகன்

4 comments:

Srivats said...

I love all the songs :P thanks for posting

Sri
Janaki fan :)

கானா பிரபா said...

அருமையான தொகுப்பு ராகவன்

Covai Ravee said...

அற்புதம் ராகவன் சார். இசையரசிக்கு கோவை வானொலி மற்றும் பாலுஜி ரசிகர்கள் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் எல்லா சுகமும் பெற்று நீடுழி வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்கிறோம்.

மாதேவி said...

வாழ்த்துகிறோம்.

Post a Comment