"நெற்றிக்கண்" திரைப்படம் 1981 ஆம் ஆண்டு கே.பாலசந்தரின் கவிதாலயா தயாரிப்பு நிறுவனம் சார்பில் அன்றைய மசாலா இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்திருந்தது. முன்னர் கலாகேந்திரா என்ற நிறுவனம் மூலம் நண்பர்களுடன் கூட்டாகத் தயாரிப்பில் ஈடுபட்ட பாலசந்தர் சொந்தமாக கவிதாலயா நிறுவனத்தைப் பின்னர் ஆரம்பித்திருந்தார்.

என் நினைவுக்கு எட்டியவரை கவிதாலயாவின் முதல் தயாரிப்பு "நெற்றிக்கண்" தான். இந்தப் படத்தில் மன்மதராஜாவாக தந்தை ரஜினி, சிறீ ராமன் குணாம்சத்தில் மகன் ரஜனி என்று இரட்டை வேடமிட்டிருப்பார்கள். கூடவே சரிதா, மேனகா போன்றோர் நடித்திருப்பார்கள்.

இப்படத்தில் "ராமனின் மோகனம்", "தீராத விளையாட்டுப் பிள்ளை", போன்ற அருமையான பாடல்களுடன் முத்தாய்ப்பாக "மாப்பிளைக்கு மாமன் மனசு, மாமனுக்கோ காமன் மனசு" என்ற பாடலும் இருக்கும். பி.சுசீலா அம்மாவுடன் மலேசியா வாசுதேவன் இணைந்து பாடியிருக்கின்றார்.
இப்பாடலின் சிறப்பு என்னவென்றால் பொதுவாக அடக்கமாக வந்த பாடல்கள் பலவற்றுக்குச் சொந்தக்காரியான பி.சுசீலா சற்றே வேகமெடுத்துப்பாடியிருப்பார். கண்ணதாசன் வரிகளில் மாமனை எள்ளி நகையாடும் பாடல் வரிகளை அனாயசமாகப் பாடியிருப்பார்.

இன்னும் ஒன்று முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது. அது இப்பாடலுக்கு இளையராஜாவால் வழங்கப்பட்ட இசை. இதே படத்தில் "தீராத விளையாட்டுப் பிள்ளை" பாடலை மேற்கத்தேயப் பாணியில் வித்யாசமாகக் கொடுத்தது போல, "மாப்பிளைக்கு மாமன் மனசு" பாடலில் கர்நாடக இசையையும் மேற்கத்தேய இசையையும் கலந்து குழைத்துக் கொடுத்திருக்கின்றார் இளையராஜா. நுட்பமாக ஆழ்ந்து அனுபவிக்கும் போது இப்பாடலில் கொடுத்திருக்கும் ஜிகல் பந்தியை ரொம்பவே ரசிக்கலாம்.
இதோ பாடலைக் கேட்டு ரசியுங்கள்.

16 comments:

CVR said...

நீங்கள் சொன்ன fusion-ஐ என்னால் கண்டுக்கொள்ள முடிகிறது அண்ணாத்த!!
வெஸ்டெர்ன் பீட்டுக்கு நடுவுல மிருதங்கம் கலை கட்டுகிறது!!
ரஹமானின் ஒட்டகத்தை கட்டிக்கோ பாட்டில் தவிலின் உபயோகத்தை நான் ரசித்து கேட்டிருக்கிறேன்!!fusion பற்றி யோசிக்கும் போது அந்த பாட்டு சட்டென்று ஞாபகம் வருகிறது.
சுசீலா அம்மா வழக்கம் போல அருமையா பாடியிருக்காங்க!!
பதிவிட்டதற்கு நன்றி!! :-)

வல்லிசிம்ஹன் said...

80களில் வந்த பாடல்களில் மிகவும் பிர்ரபலமானது இந்தப் பாடல். சுசீலா அம்மா குரல் வித்தியாசமக்கக் கேட்கக்கிடைக்கிறது.
பாட்டு, பாவம்,காட்சி எல்லாமே அருமையாக இருக்கும்.
வழக்கம் போல ஸ்மார்ட் செலக்ஷன்:))பிரபா.

கானா பிரபா said...

வாங்கய்யா காமரா கவிஞரே ;-)

மிருதங்க இசை, தவில் இசை போன்று கீழைத்தேயத்தைக் கலந்து இன்னும் நல்ல பாட்டுக்களும் வந்திருக்கின்றன இல்லையா.

வருகைக்கு நன்றி

கானா பிரபா said...

//வல்லிசிம்ஹன் said...
80களில் வந்த பாடல்களில் மிகவும் பிர்ரபலமானது இந்தப் பாடல். சுசீலா அம்மா குரல் வித்தியாசமக்கக் கேட்கக்கிடைக்கிறது.//

உண்மை தான், 80 களில் வந்த பிரபலப்பாடல்களில் இதுவும் ஒன்று. சுசீலா, மலேசியா வாசுதேவன் கூட்டணி அதிக பாடல்களில் இருக்காது. அரிதான பாடல்களில் இதுவுமொன்று.

வருகைக்கு நன்றி வல்லியம்மா

G.Ragavan said...

பிரபா...அருமையானதொரு பாட்டு. கர்நாடக தாளம்..மேற்கத்திய ராகம்...அதற்குப் பொருந்தும் குரல். அருமையான கூட்டணிப் பாட்டுங்க.

கற்றவர்கள் எழுதிய கவிதையிலும்
மற்றவர்கள் குறைகளைக் காண்பதுண்டு
...அடடா! வாலி...வாலி...

// உண்மை தான், 80 களில் வந்த பிரபலப்பாடல்களில் இதுவும் ஒன்று. சுசீலா, மலேசியா வாசுதேவன் கூட்டணி அதிக பாடல்களில் இருக்காது. அரிதான பாடல்களில் இதுவுமொன்று. //

மலேசியா சுசீலா கூட்டணி என்றால் எனக்குப் படக்கென்று மூன்று பாட்டுகள் நினைவிற்கு வரும். இது ஒன்று. மற்ற இரண்டுகள்..
1. சீனத்துப் பட்டு மேனி - தாய் மூகாம்பிகை - இளையராஜா
2. பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம் - தனிக்காட்டு ராஜா(?) - இளையராஜா

கோபிநாத் said...

கலக்கல் பாட்டு தல ;))

இந்த பாட்டு நடனம் ஆடும் நாயகி யார் தெரியுமா? விஜயசாந்தி (ஏதே என்னால முடிஞ்ச தகவல்) ;)))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!!
அருமையான பாடல், காட்சியுடன் பொருந்திய பாடலும் கூட.

கானா பிரபா said...

கானா பிரபா said...
//G.Ragavan said...
பிரபா...அருமையானதொரு பாட்டு. கர்நாடக தாளம்..மேற்கத்திய ராகம்...அதற்குப் பொருந்தும் குரல். அருமையான கூட்டணிப் பாட்டுங்க.//

வாங்க ராகவன்

உங்களுக்கு இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும் என்று நானறிவேன் ;)

அந்தப் பாட்டு கண்ணதாசன் எழுதியிருக்கிறார்.

கானா பிரபா said...

//கோபிநாத் said...
கலக்கல் பாட்டு தல ;))

இந்த பாட்டு நடனம் ஆடும் நாயகி யார் தெரியுமா? விஜயசாந்தி (ஏதே என்னால முடிஞ்ச தகவல்) ;)))//

தல

பாட்டின் காட்சியை மறந்து விட்டேன். லேடி ரஜினி விஜயசாந்தியா ஆடினாங்க? ஆஹா.

கொ.ப.செ பதவியை காப்பாத்திட்டீங்க
;-))

கானா பிரபா said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
பிரபா!!
அருமையான பாடல், காட்சியுடன் பொருந்திய பாடலும் கூட.//

தங்கள் வருகைக்கு மிக்க நன்றிகள் யோகன் அண்ணா. இப்பாடலைத் தற்போது நல்ல ஒலித்தரமுள்ள பிளேயரில் இட்டிருக்கின்றேன். கேட்டு ரசியுங்கள்.

G.Ragavan said...

// கற்றவர்கள் எழுதிய கவிதையிலும்
மற்றவர்கள் குறைகளைக் காண்பதுண்டு
...அடடா! வாலி...வாலி... //

ஒரு தப்பு பண்ணீட்டேன். பாட்டை எழுதியது வாலி அல்ல. கவியரசர். என்னிடம் கவியரசரின் திரைக்கவிதைத் தொகுப்புகள் உள்ளன. அதுவும் கண்ணதாசன் பதிப்பகத்திலிருந்து. அந்தப் புத்தகத்தில் இந்தப் பாடல் உள்ளது. தவறாகச் சொன்னமைக்கு மன்னிக்கவும்.

வவ்வால் said...

கானா,
ஜானி படத்தில் வரும் "ஆசையை காத்துல தூது விட்டு" பாடலும் இதுவும் ஒன்று போலவே தோன்றும், நல்லப்பாடல்.அதை நினைவூட்டும் வகையில் இருக்கும் எனக்கு , ஜானி தான் முதலில் வந்தது என நினைக்கிறேன்.

//2. பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம் - தனிக்காட்டு ராஜா(?) - இளையராஜா//

பாயும் புலி என்ற படம் , ராஜ தான் இசை.

Sud Gopal said...

நல்லதொரு தெரிவு...அப்படியே "எனக்குள் ஒருவன்" படத்தில் சுசீலாம்மா பாடிய அந்தப் பாடலையும் பதிக்கலாமே???

//G.Ragavan said...

மலேசியா சுசீலா கூட்டணி என்றால் எனக்குப் படக்கென்று மூன்று பாட்டுகள் நினைவிற்கு வரும். இது ஒன்று. மற்ற இரண்டுகள்..
1. சீனத்துப் பட்டு மேனி - தாய் மூகாம்பிகை - இளையராஜா//

அப்ஜெக்ஷன் மை லார்ட்ட்ட்ட்ட்...

அந்தப் பாடலைப் பாடியவர் வாணி ஜெயராம் அவர்கள்.

கொஞ்ச நாளைக்கு முன்னால் சன் ரீவியில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வந்த "நம்ம நேரம்"(சுப்பு-ருக்கு புகழ்)நிகழ்ச்சியின் இறுதியில் "மசாலா மிக்ஸ்" என்னும் ஒரு செக்மெண்ட் இடம் பெறும்.இந்தப் பாடலைத் திரையில் ஓடவிட்டுப் பின்னணியில் "காதல் கவிதை" படத்தில் இடம்பெற்ற "தக்தோம் தக்கதிமித்தோம்" பாடலை ஒலிக்கச் செய்திருந்தனர்...

பார்க்க வேடிக்கையாக இருந்தது :-)

கானா பிரபா said...

//G.Ragavan said...
// கற்றவர்கள் எழுதிய கவிதையிலும்
மற்றவர்கள் குறைகளைக் காண்பதுண்டு
...அடடா! வாலி...வாலி... //

ஒரு தப்பு பண்ணீட்டேன். பாட்டை எழுதியது வாலி அல்ல. கவியரசர்.//

ராகவன்

கற்றவர் நீங்க எழுதிய பின்னூட்டத்தில் மற்றவர்கள் பிழை கண்டுட்டோம், சரி விடுங்க ;-)

//வவ்வால் said...
கானா,
ஜானி படத்தில் வரும் "ஆசையை காத்துல தூது விட்டு" பாடலும் இதுவும் ஒன்று போலவே தோன்றும், நல்லப்பாடல்.அதை நினைவூட்டும் வகையில் இருக்கும் எனக்கு , ஜானி தான் முதலில் வந்தது என நினைக்கிறேன்.//

வாங்க வவ்வால்

ஜானி தான் முதலில் வந்தது, இரண்டு பாடல்களின் சந்தமும் ஒத்துத் தான் போகின்றது.

பொத்துக்கிட்டு ஊத்துதடி பாட்டு பாயும் புலி படத்தில் தான்

மிக்க நன்றி

G.Ragavan said...

// Sud Gopal said...
நல்லதொரு தெரிவு...அப்படியே "எனக்குள் ஒருவன்" படத்தில் சுசீலாம்மா பாடிய அந்தப் பாடலையும் பதிக்கலாமே??? //

அந்தப் பாட்டு எனக்கும் பிடிக்கும் ஓமப்பொடியாரே....அதே மெட்டை மலையாளத்திலும் இளையாராஜா இசையில் "வானிட்டெழுதிய நீலக்கடக்கண்ணில் மீனோ" என்று பாடியிருக்கிறார். அந்தப் பாட்டைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். இரண்டையும் போடலாம் என்று..ஆனால் கிடைக்கத்தானில்லை.

////G.Ragavan said...

மலேசியா சுசீலா கூட்டணி என்றால் எனக்குப் படக்கென்று மூன்று பாட்டுகள் நினைவிற்கு வரும். இது ஒன்று. மற்ற இரண்டுகள்..
1. சீனத்துப் பட்டு மேனி - தாய் மூகாம்பிகை - இளையராஜா//

அப்ஜெக்ஷன் மை லார்ட்ட்ட்ட்ட்...

அந்தப் பாடலைப் பாடியவர் வாணி ஜெயராம் அவர்கள். //

இந்த அப்ஜெக்ஷன் எல்லாம் இங்குட்டு ஆகாது. இதோ இருக்கு யூடுயூப் லிங்குசாமி. இந்தச் சாமிகிட்ட கேட்டுட்டுச் சொல்லுங்க. பாடுனது இசையரசிதான்.
http://www.youtube.com/watch?v=kAYPa7nRhBk
இந்தப்பாடலில் குரலினை மெலிதாக்கிப் பாடியிருப்பது உங்களுக்கு அப்படி ஒரு தோற்றத்தைக் கொடுக்கலாம்.

ராஜேஷ் said...

சீனத்து பட்டு மேனி பாடியவர் சுசீலா தான்.

ம‌லேசியா சுசீலா கூட்ட‌ணியில் ப‌ல‌ அருமையான‌ பாட‌ல்க‌ள் உள்ள‌ன‌

மாட‌ப்புறாவோ இல்லை ம‌ஞ்ச‌ள் நிலாவோ
செவ்வ‌ந்திப் பூ முடிச்ச‌
ஆசை நெஞ்சின் க‌ன‌வுக‌ள் வ‌ள‌ர்பிறை
ப‌வ‌ள‌ ம‌ணி தேர் மேலே
ப‌ல‌ நாள் ஆசை

இன்னும் நிறைய‌

Post a Comment