நடிகை பூர்ணிமா ஜெயராமனை...இப்பொழுது பாக்யராஜை யாரும் எளிதில் மறக்க முடியாது. பலதரப்பட்ட பாத்திரங்களில் நடித்த சிறப்பான நடிகை அவர். மும்பையைச் சேர்ந்த தமிழ்க் குடும்பத்தில் பிறந்த அவர் முதலில் மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள் என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானாலும் பயணங்கள் முடிவதில்லை படம் அவருக்குத் தமிழில் நட்சத்திரக் கதாநாயகியாக்கியது. முன்னணிக் கதாநாயகர்கள் அனைவருடனும் நடித்த அவர் திருமணத்திற்குப் பிறகு குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு விட்டார்.

அவருக்காக இசையரசி பி.சுசீலா அவர்கள் பல பாடல்களைப் பாடியிருக்கின்றார்கள். இவர் திரையுலகில் வந்த காலகட்டத்தில் இளையராஜா அறிமுக இசையமைப்பாளர் என்ற நிலை மாறி நட்சத்திர இசையமைப்பாளர் என்று நிலை பெற்று விட்ட காலகட்டம். மெல்லிசை மன்னரும் நல்ல பாடல்களைக் கொடுத்துக் கொண்டிருந்த நேரம். சங்கர் கணேஷ், டி.ராஜேந்தர் போன்றோரும் கலக்கிக் கொண்டிருந்த காலகட்டம். அந்த பொழுதில் வந்த இரண்டு பாடல்களைப் பார்ப்போம் இந்தப் பதிவில்.

முதல் பாடல் தாலாட்டுப் பாட்டு. அதுவும் டி.ராஜேந்தர் இசையில். கிளிஞ்சல்கள் படத்திற்காக. சின்னச் சின்னக் கண்ணா என்ற இந்த அழகிய பாடல் மிக இனிமையானது. கேட்டால் கிறக்கும் இந்தப் பாடல் நம்மையும் சின்னக் கண்ணனாக்கும். குழந்தைக்காகப் பாடும் இந்தப் பாடலில் மறைபொருளாக காதலனுக்கும் காதல் சொல்வாள் நாயகி. ஆகத் தாலாட்டும் இருக்க வேண்டும். குறும்பு கொப்புளிக்கும் காதலும் இருக்க வேண்டும். ரொம்பவும் சிக்கலான இந்தச் சூழ்நிலையில் இசையிரசியின் குரல் விரசம் துளியும் இல்லாமல் காதலையும் தாய்மையையும் சொல்வதைக் கேட்டு ரசியுங்கள். இந்தப் பாடலை நமக்காகத் தந்த நண்பர் குமரனுக்கும் நன்றி பல.
இரண்டாவது பாடல் இளையராஜாவின் இசையில். மலேசியா வாசுதேவன் உடன் பாடிய காதல் பாட்டு. அந்தக் காலத்துச் சிங்கப்பூரை இந்தப் பாடலில் கண்டு களிக்கலாம். இந்தப் படத்தில்தான் முதன்முறையாக இசைஞானியின் இசையில் மெல்லிசை மன்னரும் பாடியிருக்கிறார். சீனத்துப் பட்டு மேனி இளஞ்சிட்டு மேனி என்ற பாடலைக் கேட்டு ரசியுங்கள். பூர்ணிமா ஜெயராமனுக்கும் அழகாகக் குரல் பொருந்துவதையும் குழைவதையும் கேட்டு இரசியுங்கள். இந்தப் பாடலை நமக்காக youtubeல் தந்த நண்பர் ராஜேஷுக்கு நன்றி.அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

7 comments:

எம்.ரிஷான் ஷெரீப் said...

சின்னச் சின்னக் கண்ணா...பாட்டு அழகு.. :)

rapp said...

சீனத்து பட்டு மேனி என்ற பாடல் இடம்பெற்ற திரைப்படம் பேரென்னங்க?
அதேபோல ஷங்கர்(கணேஷ்) வாயசைக்கும் பழைய 'என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி' பாட்டையும் கொஞ்சம் வலையேத்த முடியுங்களா? வீடியோ இல்லைனா கூட பரவாயில்லை. ஆடியோ இருந்துச்சின்னா அதுக் கூட போதுங்க.

கானா பிரபா said...

kalakkal thokuppu ragavan, thanks

G.Ragavan said...

// rapp said...

சீனத்து பட்டு மேனி என்ற பாடல் இடம்பெற்ற திரைப்படம் பேரென்னங்க? //

வணக்கம் ராப். அந்தப் பாட்டு தாய்மூகாம்பிகை என்ற படத்தில் இருக்குது. ஜனனி ஜனனின்னு இளையராஜா பாடுவாரே

// அதேபோல ஷங்கர்(கணேஷ்) வாயசைக்கும் பழைய 'என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி' பாட்டையும் கொஞ்சம் வலையேத்த முடியுங்களா? வீடியோ இல்லைனா கூட பரவாயில்லை. ஆடியோ இருந்துச்சின்னா அதுக் கூட போதுங்க.//

ஓ அந்தப் பாட்டா... குன்னக்குடி வைத்தியநாதன் இசை. நடராசன்னு ஒருத்தர் பாடியிருக்காரு. படம் பேரு தெரியாதே. ஆனா அதை இங்க வலையேத்த முடியாது. ஏன்னா இங்க இசையரசி பி.சுசீலா பாடிய பாடல்கள் மட்டுந்தானே போடுவோம். தேன் கிண்ணம்னு ஒரு வலைப்பூ இருக்கு. அங்க நேயர் விருப்பமெல்லாம் போடுவாங்க. அவங்ககிட்ட கேளுங்களேன்.

வல்லிசிம்ஹன் said...

ராகவன்,
அழகான இனிமையான பாடல்களுக்கு நன்றி. இப்போதுதான் இளைய நிலா பாட்டைக் கேட்டு மகிழ்ந்தேன் அதில் பூர்ணிமாவின் பங்களிப்பு அருமையாக இருந்தது. நீங்கள் அதே பூர்ணிமா அவர்களின் அடுத்த முகத்தைப் போட்டு இருக்கிறீர்கள். நன்றி.

rapp said...

தகவலுக்கு நெம்ப நன்றிங்க ராகவன். ஆமாம், நான்தான் மறந்துப் போய் கேட்டுட்டேன். ஆனா எந்த இடத்தில் கேட்கனும்னு தகவல் அளிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க.

rapp said...

மற்றொரு வேண்டுகோள், 'ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி' (குட்டி பத்மினி குழந்தை நட்சத்திரமாக வந்த பாடல், படம் நினைவில்லை) என்ற பாடலை வலையேற்ற வேண்டுகிறேன்.

Post a Comment